தொழிலதிபர் நிக்கி லியோ சூன் ஹீ-உடன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், பல மாநிலங்களைச் சேர்ந்த 12 அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், 35 முதல் 49 வயதுக்கு உட்பட்ட, 10 போலிஸ் அதிகாரிகளும் இரண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்.ஏ.சி.சி) அதிகாரிகளும் ஆவர் என்று ஜொகூர் காவல்துறைத் தலைவர் அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்தார்.
கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில், ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் இன்று வரையில், ‘ஒப்ஸ் பெலிக்கான்’ 3.0, கட்டம் 2 மூலம் தடுத்து வைக்கப்பட்டதாக அயோப் தெரிவித்தார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130V முதல் பிரிவு 130ZB வரையில், அத்தியாயம் VI B தண்டனைச் சட்டம் மற்றும் பாதுகாப்பு குற்றங்களின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 சோஸ்மாவின் கீழ், விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் அனைவரும் 28 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சமீபத்திய கைதுகளுடன் சேர்த்து, நிக்கி கும்பலுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில், மொத்தம் 64 நபர்களைப் போலிசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
“இதில் சம்பந்தப்பட்ட மீதமுள்ள நபர்களையும் அடையாளம் காண, ஜொகூர் போலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வார்கள். இன்னும் அதிகமான அமலாக்க அதிகாரிகள் இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
மார்ச் 30-ம் தேதி, காவற்படைத் தலைவர் ஹமீத் படோர் 34 அதிகாரிகள் மற்றும் அமலாக்க நிறுவனத்தின் உறுப்பினர்கள் நிக்கி கும்பலுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதை வெளிப்படுத்தினார்.
- பெர்னாமா