கணபதி மரணத்திற்குச் சுயாதீன விசாரணை வேண்டும் – ம.இ.கா. கோரிக்கை

காவல்துறை தடுப்புக் காவலில் இருந்தபோது, கால் துண்டிக்கப்பட்டு இறந்த கணபதியின் மரணம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென ம.இ.கா. அழைப்பு விடுத்தது.

சுயாதீனப் போலிஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) உருவாக்கப்பட்டதன் முக்கியத்துவத்தைச் சமீபத்திய சம்பவம் நிரூபிக்கிறது என்று ம.இ.கா. உதவித் தலைவர் சிவராஜ் சந்திரன் இன்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தினார்.

“விசாரணைக்கு உதவ, போலிசார் அவரைத் தடுப்புக் காவலில் வைத்திருந்தபோது, உடல்நலக் குறைவு காரணமாக செலாயாங் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஏறக்குறைய ஒரு மாதக் காலம் அங்கிருந்த கணபதி சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். இது குறித்து உள்துறை அமைச்சு உடனடி விசாரணை நடத்த வேண்டும்.

“தடுப்புக் காவலில் இருந்தபோது, கணபதிக்கு மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டது, கடுமையாகத் தாக்கப்பட்ட காரணத்தால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், அவர் மீது உரிய கவனம் செலுத்தப்படவில்லை என கணபதியின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார், உள்துறை அமைச்சு இதற்குப் பதிலளிக்க வேண்டும்.

“போலிஸ் காவலில் இருக்கும்போது ஏற்படும் மரணங்கள் அல்லது காயங்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் புதிதல்ல. இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, இதற்கு முடிவே இல்லை என்பது போல மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன,” என்று அவர் கூறினார்.

சிவராஜ் கூறுகையில், ஒரு சுயாதீன விசாரணையை மேற்கொள்வதோடு, இந்த விஷயத்தை வெளிப்படுத்தியதற்காக இறந்தவரின் குடும்பத்தினர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

“இதுபோன்ற வழக்குகள் வரும்போது, ​​அதிகாரிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைந்துவிடும்.

“காவலில் இருக்கும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்குச், சம்பந்தப்பட்ட தரப்பினர் குறிப்பாக உள்துறை அமைச்சும் அரச மலேசியக் காவல்துறையும் பதிலளிக்க வேண்டும்.

“இந்த மரணம் ஐபிசிஎம்சியை உடனடியாக நிறுவுவதன் முக்கியத்துவத்தை மீண்டும் நிரூபிக்கிறது என்று நான் நம்புகிறேன். ஐபிசிஎம்சி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, பி.டி.ஆர்.எம். நற்பெயரை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது,” என்று அவர் கூறினார்.