கடிதம் | ஓர் இளைஞன் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டான், இயற்கை காரணங்களால் அவன் இறக்கவில்லை; ஒரு விபத்தில் அவன் பலியாகவில்லை, கோவிட்-19 பெருந்தொற்று அவனைக் கொல்லவில்லை; ஊதியம் வழங்கப்படாததால் அவன் தனது உயிரை மாய்த்து கொண்டான். அதை அவன் தனது வீடியோ பதிவில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளான், அதில் அவன் தனது முதலாளி யார் என்பதையும் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளான்.
அந்த வீடியோ பதிவு இரண்டு உலகங்களுக்கு இடையிலான – தொழிலாளி மற்றும் முதலாளி – வேற்றுமையையும் வர்க்க முரண்பாட்டையும் காட்டியுள்ளது.
முதலாளி இதுவரை செலுத்தப்படாத ஊதியத்தை இப்போது செலுத்தியுள்ளதாகவும், இறந்தவரின் உடலை தன் சொந்தப் பணத்தில் அவர் நாட்டுக்கு அனுப்பியதாகவும், உடன் ‘நல்லெண்ணப் பணம்’-ஐயும் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது அவரின் குடும்பத்தார் அமைதி காக்கவும் சமாதானமாகப் போகவும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தக் கதை இங்கேயே இப்படியே முடிய வேண்டுமா?
நாம் அமைதியாக இருக்க முடியுமா? மத்திய அரசியலமைப்பின் 5-வது பிரிவின் கீழ், ஊதியம் வழங்காதது வாழ்வாதாரத்திற்கான உரிமையை மீறுவதாகும். இந்த வழக்கில், குற்றவியல் மீறல் காரணமாக ஓர் உயிர் இழக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாக்கிஸ்தானியத் தொழிலாளி ஷாஜாத் அகமது, அவரது முதலாளி லேண்ட்சீல் சென். பெர். (Landseal Sdn Bhd) நிறுவனம் ஐந்து மாதங்களாக ஊதியம் கொடுக்காததால் தூக்கில் தொங்கிவிட்டார். முன்னதாக, அத்தொழிலாளி மோசமான நிதி சுமையிலிருந்து விடுபட, தான் தனது வாழ்க்கையை முடித்து கொள்வதாகக் கூறி, ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
அரசாங்கத்திடம் பதில்களைக் கோரும் பல கேள்விகள் நம்மிடம் உள்ளன.
புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, வாங்கியக் கடன்களைத் – பெரும்பாலும் பேராசை கொண்ட இடைத்தரகர்களுக்கு – திருப்பிச் செலுத்த, சம்பாதிக்க இங்கு வந்துள்ளனர், குறைந்த வருமானம் பெறும் அவர்களால், ஒரு மாதத்தைக் கடக்கும் அளவிற்குக்கூட சேமிக்க முடிவதில்லை.
ஐந்து மாதங்களுக்கு ஊதியம் இல்லாமல், தனது நாட்களைக் கடக்க வேண்டிய ஒரு தொழிலாளியின் மன அழுத்தத்தைக் கற்பனை செய்து பாருங்கள். ஒன்றும் இல்லாமல் வாழ, அவரை எந்தவொரு ஆலோசனையும் வற்புறுத்த முடியாது, எதுவும் இந்தத் தொழிலாளிக்கு உதவியிருக்க முடியாது : அவருடைய ஊதியம் மட்டுமே அவரைக் காப்பாற்றியிருக்க முடியும்.
ஒரு முதலாளி தனது தொழிலாளிக்கு இத்தனை மாதங்கள் சம்பளம் வழங்காமல் தப்பிப்பது எப்படி சாத்தியமானது? நாட்டில், ஊதியம் வழங்கப்படாதச் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன, ஊதியம் வழங்குபவர் அரசாங்கமாக இருப்பினும், பள்ளி ஒப்பந்தத் தொழிலாளர்களைப் போல. பலமுறை இச்சம்பவங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும், அதில் தீவிரக் கவனம் செலுத்தப்படுவதில்லை. பெரும்பாலான முதலாளிகள் தப்பித்துக்கொள்கிறார்கள், குற்றத்தில் இருந்து விலகிச் சென்று, மீண்டும் அதனைச் செய்கிறார்கள்.
இப்போது மனிதவள அமைப்புகளின் மோசமான அமலாக்கத்தால் ஓர் உயிர் பலியாகிவிட்டது, மனிதவள அமைச்சு இனி இதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமா?
இந்தச் சம்பவத்திற்கு ஒரு பொதுவான எதிர்வினை என்னவென்றால், மனிதவள இலாகா அலுவலகத்தில் புகார் அளிக்காமல், அத்தொழிலாளி ஏன் இவ்வளவு தீவிரமான முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான்.
தொழிலாளர்கள் தங்கள் புகார்களைத் தொழிலாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல உரிமை உள்ளதா? துரதிர்ஷ்டவசமாக, இந்த உரிமை காகிதத்தில் மட்டுமே உள்ளது; உண்மையில் புகார் அளிப்பவர்கள் வேலையிடத்தில் பழிவாங்கல் மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.
பாதுகாப்பற்றச் சட்டத்தால், இந்த இளம் பாகிஸ்தான் தொழிலாளி பலியானார். அரசாங்கம் தனது வணிகச் சார்பு நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில், அமலாக்கக் குறைவுள்ள சூழ்நிலையில் தொழிலாளர்கள் மிதிபடவும், தங்கள் குறைகளை வெளிகாட்ட முடியாமல் தவிக்கவும் அனுமதிக்கக்கூடாது.
இந்தத் துயரச் சம்பவம், மலேசியாவில், நாம் புலம்பெயர்ந்தத் தொழிலாளர்களை நிர்வகிக்கும் முறையில் உள்ள மோசமான நிலையைக் குறிக்கிறது. வெளிநாட்டு தொழிலாளர்களை நிர்வகிப்பதற்கான சுயாதீனக் குழுவின் அறிக்கை மற்றும் மலேசியாவில் தொழிலாளர் இடம்பெயர்வு தொடர்பான ஒரு விரிவான தேசியக் கொள்கையை நோக்கிய MWR2R அறிக்கை போன்றவற்றில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாவிட்டால், நல்லதொரு மாற்றத்தை நாம் காண முடியாது.
அரசாங்கம், இந்தத் துறையை ஒழுங்குபடுத்தாமல், முதலாளிகளின் எண்ணம் மற்றும் விருப்பப்படி விட்டுவிடுவதை ஏற்க முடியாது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தொழில்கள் மோசமடைவதைத் தடுக்கக் கடுமையான கோரிக்கைகள் இருந்தபோதிலும், அவர்களின் உரிமைகளுக்கு உரிய மரியாதையை முதலாளிகள் கொடுக்க மறுக்கின்றனர்.
ஊதியம் வழங்குவதைத் தவிர்க்கும் முதலாளிகள் மீது, எந்தவொரு சாக்கு போக்கும் சொல்லாமல் அரசாங்கம் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாக்கிஸ்தானியத் தொழிலாளியின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த முதலாளி மீது உடனடியாக விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட வேண்டும் என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) அரசாங்கத்தைக் கோருகிறது.
—————————————————————————————————————————-மோகனராணி இராசையா, புலம்பெயர் தொழிலாளர் நலப்பிரிவு ஒருங்கிணைப்பாளர், பி.எஸ்.எம்.