வாக்கு18-ஐச் செயல்படுத்த ஈசி உடனடியாக நடவடிக்கை எடுக்கும் – தக்கியுட்டின்

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வாக்களிக்கும் வயதைக் (வாக்கு 18) குறைக்க தேர்தல் ஆணையம் (ஈசி) உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் திணைக்களத்தின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் தக்கியுட்டின் ஹசான் தெரிவித்தார்.

“(அமைச்சரவை) முடிவைத் தொடர்ந்து, சில சட்ட விதிகள் மற்றும் தேவையான மென்பொருள் முறையைப் புதுப்பிப்பது உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்கள் தொடர்பான பல விஷயங்களைத் தீர்ப்பதற்கு ஈசி உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்,” என்று அவர் இன்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

தானியங்கி வாக்கு பதிவு (ஏ.வி.ஆர்.) அமலாக்கம் செப்டம்பர் 2022-க்குத் தள்ளி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாக்கு18-ஐ ஒத்திவைப்பதாகக் கடந்த மாதம் ஈசி அறிவித்தது.

முன்னதாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (பி.கே.பி) இந்தத் திட்டத்தைப் பாதித்தது என்றும், இந்த ஆண்டு செப்டம்பரில் பூர்வாங்க அறிக்கை தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால், 18 முதல் 20 வயதுடைய 1.2 மில்லியன் இளைஞர்கள், இந்த ஆண்டு ஆகஸ்டில், அவசரகாலப் பிரகடனம் காலாவதியாகியப் பின்னர் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் (ஜி.இ.) வாக்களிக்க முடியாமல் போனது.

ஜூலை மாதம் அமலாக்கம் காணவிருந்த வாக்கு18, ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் ஆணையமும் தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கும் இது ஓர் எதிர்வினையைத் தூண்டியது.

வயது வரம்பைக் குறைப்பது ஏ.வி.ஆரிலிருந்து தனித்தனியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட, பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

18 மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு 15-வது ஜி.இ.யிலும் எந்தவொரு இடைத்தேர்தலிலும் (பி.ஆர்.கே.) வாக்களிக்கும் உரிமையை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் தக்கியுட்டின் வலியுறுத்தினார்.