வெளிநாட்டு தொழிலாளர் தற்கொலை – தேசியத் தொழிலாளர் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்து

நாட்டின் தற்போதையத் தொழிலாளர் கொள்கையை மறுஆய்வு செய்வதன் மூலம் ஊதியம் பெறாத வெளிநாட்டு தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணனை ஒரு பொருளாதார நிபுணர் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் நாட்டு ஊழியர் ஒருவர், 5 மாதங்கள் ஊதியம் வழங்கப்படாத்தால், கடந்த ஏப்ரல் 17-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் என நம்பப்படுவதாக ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டதை அடுத்து இந்த அழைப்பு வந்துள்ளது.

மலேசியாகினியிடம் பேசியப் பொருளாதார நிபுணரும், முன்னாள் மூத்த அரசாங்க அதிகாரியுமான ரேமன் நவரத்னம், இந்தச் சோகம் நாட்டில் தொழிலாளர் முறை குறித்து மோசமான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

“ஓர் உயிர் பலியாகிவிட்டது, மேலும் பல உயிர்கள் இழக்கப்படலாம் (இது போன்று), எனவே நிலைமையை எவ்வாறு மாற்றுவது?

“சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்படாததால், உயிர் இழப்பை ஏற்படுத்தும் இந்த ஆபத்தான மற்றும் கடுமையான பிரச்சினைக்குத் தீர்வுகாண என்ன செய்ய முடியும் என்று அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படாததை அமைச்சு உடனே அறிந்து, தொடர் நடவடிக்கை எடுக்க நாம் பின்னூட்ட வலையமைப்பை உருவாக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“இன்றையத் தகவல் தொழில்நுட்பம் மூலம், கைப்பேசி உள்ள எவருக்கும் பணம் செலுத்தப்படாவிட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் புகாரளிக்க முடியும். இதன்வழி, இதுபோன்ற சோகங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதோடு, தொழிலாளர்களுக்கு முதலாளிகள் சம்பளத்தை வழங்காமல் தட்டிக்கழிப்பதை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்ற செய்தியையும் இது தெரிவிக்கும்,” என்று அவர் கூறினார்.

“ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை […] முதலாளிகள் அதுபோன்றச் சூழ்நிலையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். இது மிகவும் வருத்தமாகவும் கொடூரமாகவும் மன்னிக்க முடியாததாகவும் இருக்கிறது,” என்று ஆசிய வியூகம் மற்றும் தலைமைத்துவ நிறுவனத்தின் (ASLI) பொது கொள்கை ஆய்வு மையத் தலைவரான நவரத்னம் கூறினார்.

ஊழியர்கள் புகார் அளிக்கவும் உதவி கோரவும் அவசரத் தொலைத்தொடர்பு எண்ணை அவசியம் உருவாக்க வேண்டும் என்றார் அவர்.

“முழுக் கொள்கைகளும் மதிப்பாய்வு செய்து, திருத்தப்படுவதோடு; மேம்பட்ட அமலாக்கத்துடனும், பொதுக் கருத்து முறையுடனும் மீண்டும் நிறுவப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மேலும், அனைத்து வெளிநாட்டு தூதரகங்களும் உயர் ஆணையங்களும் தங்கள் குடிமக்களிடமிருந்து கருத்துக்களையும் தகவல்களையும் பெற்று, அதனை மலேசிய அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும்.

முன்னதாக, ஏப்ரல் 17-ஆம் தேதி, ஜாலான் ஆம்பாங்கிற்கு அருகிலுள்ள ஒரு கட்டுமான இடத்தில் ஷாஜாட் அகமது என்ற பாக்கிஸ்தானியத் தொழிலாளி, தனது பணியிடத்தில் இறந்து கிடந்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டது.

தொழிலாளர் வள இலாகா (ஜே.தி.கே) 1995 வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ், இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதுபோன்ற விசாரணைகள் வழக்கமாக ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும் என்று அந்த இலாகாவின் அதிகாரி ஒருவர் கூறினார்.

பி.கே.பி. காரணமாக முதலாளி நிதி சுமையை எதிர்கொண்டிருந்ததால், ஷாஜாட்டின் சம்பளத்தைச் செலுத்த முடியாமல் போனது எனக் கூறப்படும் செய்தியில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று நவரத்னம் கூறினார்.

“இப்போது அவர்களால் எப்படி செலுத்த முடிகிறது (அவர் இறந்த பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சம்பளம்)? அவர்கள் திவாலாகிவிட வாய்ப்பில்லையே,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“எல்லோரும் காரணங்களைக் கூறினால், யாரும் அக்கறை கொள்ளவில்லை என்றால் (தொழிலாளர்களின் நலனைப் பற்றி), நாம் அவர்களை அக்கறை கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அதுவே அரசாங்கத்தின் பங்கு, ஆனால் அரசாங்கம் மக்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது,” என்று நவரத்னம் மேலும் கூறினார்.

நிதிப் பிரச்சினைகள் காரணமாக முதலாளிகளுக்குச் சம்பளம் வழங்க முடியாத சந்தர்ப்பங்களில், முதலாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் உதவக்கூடியக் கொள்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.