நாட்டின் புதியக் காவற்படைத் தலைவராக (ஐ.ஜி.பி), தற்போது துணைத் தலைவராக இருக்கும் அக்ரில் சானி அப்துல்லா சானி நியமிக்கப்பட்டுள்ளார், இது அடுத்த செவ்வாய்க்கிழமை (மே 4) முதல் நடைமுறைக்கு வரும்.
அந்த மூத்தக் காவல்துறை அதிகாரிக்குத், தேசியக் காவல்துறை தலைவருக்கான நியமனக் கடிதம், உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினிடம் இருந்து இன்று கிடைக்கப் பெற்றது.
மே 4, 2019 முதல், இந்தப் பதவியை வகித்து வரும் அப்துல் ஹமீத் படோரின் பதவிக்கால ஒப்பந்தம், மே 3-ம் தேதி முடிவடையும் நிலையில், அவருக்குப் பதிலாக, அக்ரில் சானி 13-வது ஐ.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று கோலாலம்பூரில், அக்ரில் சானிக்கு நியமனக் கடிதத்தை ஒப்படைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹம்சா, இந்த நியமனத்திற்கு யாங் டி-பெர்டுவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறினார்.
காவற்படை ஆணையத்தின் (எஸ்.பி.பி.) பரிந்துரையின் பேரில், பிரதமர் முஹைதீன் யாசின் ஆலோசனையைப் பெற்றபின் இது நடப்பதாகவும் அவர் சொன்னார்.
“எஸ்.பி.பி. செயல்முறை முடிந்து, ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக்கொண்ட பிறகே நான் இதனைத் தெரிவிக்கிறேன்.
“அப்துல் ஹமீத் படோர் உட்பட, புதிய ஐ.ஜி.பி.-யாக அக்ரில் சானி நியமிக்கப்படுவதை அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்
ஐ.ஜி.பி.-யாக அக்ரில் சானியின் நியமனம் 2021 அக்டோபர் 3-ஆம் தேதி வரையில் இருக்கும், காவல்துறையில் அவரது சேவை காலம் முடிவடையும் வரை என ஹம்சா அறிவித்தார்.
அக்ரில் சானி, 3 அக்டோபர் 1961-ல், சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் பிறந்தார். வடமலேசியா பல்கலைக்கழத்தில் அறிவியல் (நிர்வாகம்) துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். 2 பிப்ரவரி 1986-ல், கேடட் உதவி போலீஸ் சூப்பிரண்டாக (ஏஎஸ்பி) அரச மலேசியக் காவல்துறையில் சேர்ந்தார். தனது சேவை காலத்தில் மாவட்ட, மாநில மற்றும் புக்கிட் அமான் தலைமையக மட்டங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
அவர் வகித்த பதவிகளில் சரவாக் போலீஸ் கமிஷனர், பேராக் காவல்துறைத் தலைவர், குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் மற்றும் வணிகக் குற்றவியல் விசாரணைத் துறை இயக்குநர் ஆகியவையும் அடங்கும்.