போலிஸ் காவலில் இருந்தபோது, மருத்துவமனையில் இறந்த கணபதி தாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கோம்பாக் மாவட்டக் காவல்துறை தலைவர் அரிஃபாய் தாராவே தெரிவித்தார்.
தடுப்புக் காவலை நீட்டிக்க மூன்று முறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, கணபதி ஒருபோதும் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகப் புகார் கூறவில்லை என அவர் மேலும் சொன்னார்.
“பிப்ரவரி 25, மார்ச் 2 மற்றும் மார்ச் 6 ஆகிய தேதிகளில், தடுப்புக் காவலை நீட்டிக்க மூன்று முறை அவர் மாஜிஸ்திரேட்டின் முன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால், அவர் மாஜிஸ்திரேட்டிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
“பாதிக்கப்பட்டவருக்குப் பிப்ரவரி 28, மார்ச் 3, மார்ச் 6 மற்றும் மார்ச் 7 ஆகியத் தேதிகளில் சிகிச்சை அளித்த மருத்துவ அதிகாரி மற்றும் உதவி மருத்துவ அதிகாரியிடமும் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை,” என்று அவர் இன்று கோம்பாக் மாவட்டக் காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள், கால்கள் மற்றும் தோள்களில் பலத்த காயம் காரணமாக கணபது இறந்துபோனார் என்று கண்டறியப்பட்டது குறித்து கருத்து தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும், முடிந்ததும் அறிக்கை அரசு துணை வழக்குரைஞர் அலுவலகத்திற்கு விசாரணை முன்மொழிவுடன் அனுப்பப்படும் என்றும் ஆரிஃபாய் கூறினார்.
“எந்தவொரு புதிய முன்னேற்றங்களும் தெரிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
கணபதியின் குடும்ப வழக்கறிஞர் கே கணேஷ், கணபதி கால்கள் மற்றும் தோள்களில் பலத்த காயம் காரணமாக இறந்துவிட்டார் என்று மலேசியாகினியிடம் கூறினார்.
இதற்கிடையில், வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதால், பொது மக்கள் எதனையும் ஊகிக்கவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ கூடாது என்று அரிஃபாய் அறிவுறுத்தினார்.