சலாவுட்டின் : புதிய ஐ.ஜி.பி. நியமனத்தை ஒத்திவைத்து, ஹமீட்-ஹம்ஸா பிரச்சனையைத் தீர்க்கவும்

தேசியக் காவல்துறைத் தலைவராக (ஐ.ஜி.பி.), நேற்று தனது கடைசி செய்தியாளர் கூட்டத்தில் அப்துல் ஹமீத் படோர் எழுப்பிய பிரச்சினைகளை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என்று அமானா துணைத் தலைவர் சலாவுட்டின் அயூப் தெரிவித்தார்.

இது அப்துல் ஹமீட்டுக்கும் உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினுக்கும் இடையிலான ஒரு “வெளிப்படையானப் போர்” என்று வர்ணித்த சலாஹுட்டின், புதிய தேசியக் காவல்துறைத் தலைவராக அக்ரில் சானி அப்துல்லா சானி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், இப்பிரச்சனைகளை முதலில் தீர்க்க வேண்டும் என்று கூறினார்.

“அமைச்சரவை, பிரதமர் (முஹைதீன் யாசின்) ஒரு புதிய ஐ.ஜி.பி.யை நியமிப்பதற்கு முன் இந்தத் திறந்த யுத்த பிரச்சினையைத் தீர்ப்பது நல்லது … (அக்ரிலின் நியமனம்) நியமனம் அறிவிக்கப்பட்டிருந்தாலும்.

“ஒரு புதிய ஐ.ஜி.பி.யை நியமிக்கும் அரசியல் வழியிலான செயல், அப்துல் ஹமீட் எழுப்பியப் பிரச்சனைகளை மூழ்கடிக்காது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அடுத்த செவ்வாய்க்கிழமை (மே 4) முதல், புதிய ஐ.ஜி.பி.ஆக அக்ரில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அப்துல் ஹமீட், போலிஸ் படையில் அரசியல் தலையீடு உள்ளது உட்பட, பலவற்றை வெளிப்படையாகப் பேசினார், மேலும் மூத்த போலீஸ் அதிகாரிகளை நியமிக்க அமைச்சர் ஏற்பாடுகள் செய்யக்கூடாது என்றும் அவர் கூறினார்.

ஹம்சாவின் செயல்பாடுகளில் அவருக்குத் திருப்தியில்லை என்றும் இருவருக்கும் இடையிலான உறவு மோசமானது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

நேற்று, போலிஸ் படை தலைவர் நியமனம் தொடர்பாக கசிந்த பதிவின் குரல் தன்னுடையது என்று ஹம்சா ஒப்புக் கொண்டார், ஆனால் அவர் காவல்துறை அதிகாரிகளின் கடமைகளை நிர்ணயிக்கும் எஸ்.எஸ்.பி.யின் தலைவராக இருப்பதால் அதில் எந்தக் குற்றமும் இல்லை என்று வலியுறுத்தினார்.

மேலும், அப்துல் ஹமீட், ஹம்ஸா தலைமையிலான போலிஸ் சேவைகள் ஆணைக்குழுவின் (எஸ்.பி.பி.) பலவீனங்கள் பற்றியும் பேசினார், அது “அரசியல் தலையீடுகள்”-ஆல் கறைபட்டுள்ளது என்றும், ஓர் அமைச்சர் அந்த ஆணையத்தை வழிநடத்தக்கூடாது என்பதும் அவர் கருத்தாகும்.

இதற்கிடையில், அமானாவின் மத்தியச் செயற்குழு உறுப்பினர் ஹனிபா மைடின், ஹம்சா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை அவர் “ஓய்வெடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

“இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் விரிவாக விசாரிக்கப்படுவது பொருத்தமானது, காவல்துறை அவசியம் பொறுப்பாக விசாரணை நடத்த வேண்டும்,” என்று அவர் நேற்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

விசாரணை நியாயமானதாகவும் நிபுணத்துவத்துடனும் இருக்க, காவல்துறை உள்துறை அமைச்சின் கீழ் இருப்பதால், அதன் அமைச்சரான ஹம்ஸா தனது பதவியில் இருந்து ‘ஓய்வெடுக்க வேண்டும்’ என்று அவர் மேலும் கூறினார்.

“ஐ.ஜி.பி. (அப்துல் ஹமீத்) மற்றும் அவரது வருங்கால வாரிசான (அக்ரில்) ஆகியோரையும் ‘ஓய்வெடுக்க’ கேட்டுக்கொள்வதும் தவறல்ல, இதனால் விசாரணை செயல்முறை வெளிப்படையாகவும் சுமூகமாகவும் இயங்கும்,” என்று செப்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கூறினார்.