ஐபிசிஎம்சி மசோதாவை நாம் ஏன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்

எம்.பி. பேசுகிறார் | போலிஸ் தவறான நடத்தை சுயாதீனப் புகார்கள் ஆணையத்தின் (ஐபிசிஎம்சி) மசோதாவைத் தாக்கல் செய்வது குறித்து பல தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக காவல்துறை, இந்த மசோதா குறித்து கவலை தெரிவித்துள்ளது, போலிஸ் ஊழல்களைப் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்துவது காவல்துறையைப் பலவீனப்படுத்தும், அவர்களின் பிம்பத்தைக் கெடுக்கும் என்று அது கூறியுள்ளது.

ஆனால், ஐபிசிஎம்சி என்பது தவறான நடத்தைகளைவிட மேலானது, ஏனெனில் இது போலிஸ் நலனையும் கவனிக்கும். நாடு முழுவதும் 130,000-க்கும் மேற்பட்ட போலிஸ் பணியாளர்கள் உள்ளனர், மேலும் காவல்துறைக்குச் சேவை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது.

ஐபிசிஎம்சி என்பது போலிஸ் நலன் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கும், இந்த முக்கியமான நிறுவனத்தின் தொழில்முறை, சார்பற்ற தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான போலிஸ் வசதிகள், செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகளைத் தணிக்கை செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் உதவும் ஆகும்.

ஏன் ஆட்சேபனை இருக்கிறது?

ஐபிசிஎம்சி நிறுவப்படுவதற்கான முக்கிய ஆட்சேபனை என்னவென்றால், அது மத்திய அரசியலமைப்பின் பிரிவு 140-ஐ மீறுகிறது. நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடு போன்ற போலிஸ் படை மீதான கட்டுப்பாட்டை நமது அரசியலமைப்பு போலிஸ் படை ஆணையத்திடம் அளித்துள்ளது என்பது உண்மைதான்.

இருப்பினும், அரசியலமைப்பு தெளிவாக, ஒழுங்கு கட்டுப்பாட்டை மற்றொரு அதிகாரத்திற்கு ஒதுக்க நாடாளுமன்றத்தை அனுமதிக்கிறது. போலிஸ் படையை மேற்பார்வையிட ஒரு தனி அமைப்பு தேவை என்று அரசியலமைப்பின் வடிவமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

ஏன் நமக்கு ஐபிசிஎம்சி தேவை?

ஐபிசிஎம்சிக்கான யோசனை புதியதல்ல; இது முதன்முதலில் 14 ஆண்டுகளுக்கு முன்பு, 2005-ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது, தடுப்புக் காவலில் இறப்புகள் மற்றும் போலிசாரின் கொடூரச் செயல்கள் காரணமாக, அரச விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரைகளின் ஒரு பகுதியாக இது இருந்தது.

தடுப்புக் காவலில் இறப்புகள், கைதிகளுக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் நிர்வாக தடுப்புச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட அதிகார அத்துமீறல் தொடர்பாக, 900-க்கும் மேற்பட்ட புகார்களை அரச ஆணையம் பெற்றது.

மேலும், போலிஸ் படையினருக்குள் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை பற்றாக்குறை இருப்பதையும் ஆணையம் கண்டறிந்தது. தடுப்பு காவல் மரணங்களுக்கு,  காவல்துறை அதிகாரிகளின் தவறான நடத்தைதான் காரணம் என உடனே குற்றஞ்சாட்டுவதும் நியாயமல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் உண்மையில், இதுபோன்ற தோல்விகளின் விளைவாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மரணங்களே நிகழ்ந்துள்ளன.

எவ்வாறாயினும், இந்த விஷயங்களை விசாரிக்கவும், நாட்டின் மிக முக்கியத் தேசிய நிறுவனங்களில் ஒன்றின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் ஒரு சுயாதீன அமைப்பு தேவை.

ஜூலை 18, 2019 அன்று, நாடாளுமன்றத்தில் ஐபிசிஎம்சி மசோதா அட்டவணைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மசோதாக்களைக் கருத்தில் கொள்ளும் தேர்வுக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் மசோதாவாக இது வரலாற்றை உருவாக்கியது.

தேர்ந்தெடுக்கப்பட்ட குழு வல்லுநர்கள், போலிஸ் படையின் பிரதிநிதிகள், இங்கிலாந்து சுயாதீனப் போலிஸ் நடத்தை அலுவலகத்தின் (ஐஓபிசி) பிரதிநிதிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் மாறுபட்ட கருத்துக்களை ஆணையம் செவிமடுத்து வந்துள்ளது.

அஸலினா ஓத்மான் (பி.என்-பெங்கெராங்) மற்றும் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபர் (ஜி.பி.எஸ்.-சந்துபோங்) ஆகியோரை உள்ளடக்கிய இந்தக் குழு, நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைகளை வழங்குவதில் அனைத்து கருத்துக்களையும் கவனமாகப் பரிசீலித்துள்ளது என்று நான் நம்புகிறேன்.

காவல்துறை மீது மேற்பார்வை இல்லையா?

தற்போது, நம்மிடம் அமலாக்க முகமை ஒருமைப்பாடு ஆணையம் (ஈ.ஏ.ஐ.சி) உள்ளது, இது அனைத்து அமலாக்க அதிகாரிகளின் ஒழுக்காற்று நடத்தையை மேற்பார்வை செய்கிறது. ஆனால், விசாரணைகளை நடத்துவதற்கான அதிகாரம் அதற்கு உண்டு என்றாலும், அது காவல்துறை ஆணையத்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை மட்டுமே பரிந்துரைக்க முடியும், மேலும் அந்த நடவடிக்கைகளை அவர்களே செயல்படுத்தக்கூடாது.

ஐபிசிஎம்சி உருவாக்கம், ஈ.ஏ.ஐ.சி.யைச் செயலிழக்கச் செய்துவிடும் என்று அர்த்தமல்ல – இது மற்ற அனைத்து சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்களின் மீதான மேற்பார்வை பராமரிக்கும்.

ஒருமைப்பாடு மற்றும் ஒழுக்கத்தை உறுதி செய்வதற்காக அரச மலேசியக் காவல்துறை, நேர்மை மற்றும் தரநிலைகள் இணக்கத் துறையை (ஜிப்ஸ்) நிறுவியுள்ளது. இருப்பினும், ஜிப்ஸ் முழுமையாக சுதந்திரமாக இயங்க முடியாது என்ற கவலையும் உள்ளது.

ஐபிசிஎம்சியால் பொதுமக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்?

உலகெங்கிலும் உள்ள சட்ட அமலாக்க கட்டமைப்பால் கவனிக்கப்படும் ஒரு கொள்கை : காவல்துறையை ஒரு சுயாதீன அமைப்பு மேற்பார்வையிட வேண்டும். காவல்துறையினர் பலவிதமான அதிகாரங்களைக் கொண்டிருப்பதால், இது மிகவும் முக்கியமானது, அவை கவனமாக ஆராயாமல் தவறாகப் பயன்படுத்தப்படலாம். மலேசியாவில், காவல்துறையின் சரிபார்க்கப்படாத அதிகாரங்களைப் பற்றிய கவலைகள் இருப்பதால் இது மிகவும் தேவையாக உள்ளது.

பல வன்முறைகளும் நடந்துள்ளன : அம்ரி சே மே மற்றும் ரேமண்ட் கோ ஆகியோர் வலுகட்டாயமாகக் காணாமல் போனது; 2009-ஆம் ஆண்டில் குகன் ஆனந்தன் சிறுநீரகச் செயலிழப்பால் போலிஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்தது மற்றும் 2010-ஆம் ஆண்டு, 14 வயது அமினுல்ராசித் அம்சா கார் துரத்தலின் போது போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது என பட்டியல் உள்ளது. இந்த வழக்குகளில் சிலவற்றில், பாதிக்கப்பட்டவர்களுக்குக் குற்றவியல் வழக்கு அல்லது நீடித்த சிவில் வழக்கு மூலம் நீதி கிடைத்தது.

மனித உரிமைக் குழுக்களின் அவதானிப்புகளும் நடுநிலையாகவே உள்ளன. சுவாரா, தனது ‘மலேசியக் கண்ணோட்டத்தில், 2016 மனித உரிமைகள் அறிக்கை’யில், 2013 முதல் ஏப்ரல் 30, 2016 வரையிலான காலகட்டத்தில், 721 கைதிகள் தடுப்புக் காவலில் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) நடத்திய ஒரு கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி, 369 கைதிகளில் 10 விழுக்காட்டினர் உடல் ரீதியான வன்முறைகளைக் கண்டும், கேட்டும் அல்லது அனுபவித்தும் உள்ளதாகச் சுவாரா குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு சுயாதீனமான ஐபிசிஎம்சியால், இந்த வழக்குகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதை உறுதிசெய்ய முடியும், மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது முறையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதொடு; கூடுதலாக, காவல்துறையினரால் குற்றவியல் விசாரணை தொடங்கப்படுவதற்கான காரணங்களையும் இது வழங்கும்.

இது பல் இல்லாத மற்றொரு புலியா?

தற்போதைய மசோதா, ஐபிசிஎம்சி போலிஸ் படையிலிருந்து சுயாதீனமாகச் செயல்பட வேண்டும் என்றும், அதன் குழுவில் எந்தப் போலிஸ் அதிகாரியும் அமரக்கூடாது என்றும் முன்மொழிகிறது. மசோதாவின் பிரிவு 6 (2,) முன்னாள் அல்லது சேவையில் இருக்கும் போலீசார் அல்லது அரசாங்க உறுப்பினர்களை ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிப்பதைத் தடுக்கிறது.

ஐபிசிஎம்சியால் பரந்த அளவில், தவறான நடத்தைகளை விசாரிக்க முடியும். மசோதாவின் 47-வது பிரிவின்படி, காவலின் போது நடக்கும் எந்தவொரு இறப்பு பற்றிய அறிக்கைகளையும் நேரடியாக ஐபிசிஎம்சிக்குத் தெரிவிக்க வேண்டும்; இதனால், இது போன்ற நிகழ்வுகளில் காவல்துறையினர் தலையிடுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

மிக முக்கியமாக, ஐபிசிஎம்சி மசோதா போலிஸ் அதிகாரிகள் உட்பட எந்தவொரு நபருக்கும் தகவல்களை வழங்கவோ அல்லது விசாரணையை எளிதாக்குவதற்கான ஆவணங்களைக் கொடுக்கவோ கட்டாயப்படுத்த முடியும், அதில் தோல்வியுற்றால் தண்டம் அல்லது சிறைவாசம் அல்லது இரண்டும் அவர்களுக்கு விதிக்கப்படும்.

இது போலிஸ் படையை முடக்குமா?

போலிஸ் அதிகாரிகள் இந்தச் செயல்முறையால் பாதிக்கப்படுவார்கள் என்று இதற்கு அர்த்தமில்லை. இந்த மசோதா இலவச மற்றும் நியாயமான விசாரணைகளை உறுதிசெய்கிறது மற்றும் தவறான நடத்தைக் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு காவல்துறை அதிகாரியும் தன்னைத் தற்காத்துக் கொள்ள போதுமான வாய்ப்பைப் பெறுவார்.

அதிகாரி அமைதியாக இருக்க தனது உரிமையையும் பயன்படுத்த முடியும். கூடுதலாக, போலிஸ் படையைச் சார்ந்த ஓர் உறுப்பினர், அதிகாரிக்கு எதிரான முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஒழுக்காற்று வாரியத்தில் இருப்பார்.

தேர்வுக் குழு பரிந்துரைத்த திருத்தங்கள், சிறிய முறைகேடுகள் குறித்து ஒழுக்கக் கட்டுப்பாட்டைக் காக்க காவல்துறையை அனுமதிக்கும். சிறிய நிர்வாக மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக காவல்துறையினரே விசாரித்து முடிவுகளை எடுக்க முடியும். இதுபோன்ற நிகழ்வுகளில், சிறு தவறான நடத்தை ஒழுங்கு முறையீட்டு வாரியத்திடம் (Minor Misconduct Disciplinary Appeal Board) யாராவது முறையிட்டால் மட்டுமே ஐபிசிஎம்சி தன் பங்கை வகிக்கும்.

போலிஸ் தலைவர் (ஐ.ஜி.பி.) அந்தஸ்தும் மதிக்கப்படுகிறது. அவர் மீது குற்றச்சாட்டு இருந்தால், மத்திய அரசியலமைப்பின் பிரிவு 132-ன் படி, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டை செவிமடுக்க சிறப்பு வாரிய உறுப்பினர்களை நியமிப்பார்.

மேல்முறையீடு செய்வதற்கான உரிமை மற்றும் அமைதி காப்பதற்கான உரிமையை வழங்குவதன் மூலம், ஐபிசிஎம்சி மசோதா, உண்மையில், அதிகாரிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும், அதேநேரத்தில் திறமையான மேற்பார்வையையும் உறுதி செய்யும்.

காவல்துறையின் நலனை மேம்படுத்துதல்

இவற்றையெல்லாம் சொல்லிவிட்டு, நம் நாட்டின் மிகவும் நேசத்துக்குரிய நிறுவனங்களில் ஒன்றின் அதிகாரிகளின் நலனைக் கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் நான் எடுத்துக்காட்டுகிறேன்.

மோசமான வசதிகள் கொண்ட காவல் நிலையங்கள், போலிசார் தங்குமிடங்களில் மோசமான வாழ்க்கை நிலைமைகள், பணிச்சுமைகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு ஈடாக சம்பளம் உயர்வின்மை போன்றவற்றையும் நாம் சில நேரங்களில் கேள்விப்படுகிறோம். இந்தச் சூழலில், ஐபிசிஎம்சி அறிமுகப்படுத்தப்படுவதற்கு நிறைய எதிர்ப்புகள் உள்ளன என்பது புரிந்துகொள்ளத்தக்கது.

முன்னோக்கி நகரும் போது, நம் அதிகாரிகளின் நலனில் விரைவான மற்றும் அர்த்தமுள்ள மேம்பாடுகளுக்கு வாதிடுவதில் நான் மிகவும் தீவிரமாக இருப்பேன். ஆனால், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க நாம் தீவிர முயற்சி செய்தால் மட்டுமே இதனை ஆர்வத்துடன் தொடங்க முடியும், ஐபிசிஎம்சி ஓர் ஆரம்பம் மட்டுமே.


மரியா சின் அப்துல்லா, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழாக்கம் :- சாரணி சூரியமதன்