சிறையில் கைதிகள் மீது அதிகார அத்துமீறல், குடும்பத்தார் புகார்

சுங்கை ஊடாங் சிறையைச் சார்ந்த 10 கைதிகள், ஜெலெபு சிறையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டபோது தங்கள் மீது அதிகார அத்துமீறல் நடந்தது என தங்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்தம் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் பதிவுசெய்தனர்.

அவர்களின் பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய்களில் மிளகு தூள் தெளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுநீர், மலம் கழிக்க இயலாமல் அவர்கள் சிரமப்படுகின்றனர்.

சில குடும்ப உறுப்பினர்கள் அவர்களிடம் கூறப்பட்ட அத்துமீறல்களை விவரிக்கும் போது கண்ணீர் வடித்தனர்; கொடுமை தாளாது சில கைதிகள் தற்கொலை செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறப்பட்டது.

“என் கணவர், நான் தொடர்ந்து உள்ளேயே இருந்தால், சிறையிலேயே இறந்துவிடுவேன், நான் தற்கொலை செய்து கொள்வேன், இல்லையெனில் என்னை அடித்தேக் கொன்றுவிடுவார்கள் என்று என்னிடம் சொன்னார்,” என்று தற்போது காவலில் இருக்கும் பி கலையரசனின் மனைவி ஆர் லாவண்யா கூறியதை, சேபாரான் காசே தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் பாஸ்தர் பிரின்ஸ் ஜோன் மொழிபெயர்த்து கூறினார்.

அழுகையின் காரணமாக லாவண்யாவால் தொடர்ந்து பேச முடியவில்லை.

போலிஸ் காவலில் இருந்தபோது, கால் துண்டிக்கப்பட்டு இறந்த கணபதியின் செய்தி வெளியான சில வாரங்களுக்குப் பின்னர் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முன்னதாக, கணபதியின் வழக்கறிஞரின் கூற்றுப்படி, பிரேதப் பரிசோதனையில், அவரது கால்கள் மற்றும் தோள்களில் ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் இறந்தார் என்று கண்டறியப்பட்டது; ஆனால், தாக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று போலீசார் கூறினர்.

சிறை அதிகாரியா என்பது உறுதியாகத் தெரியவில்லை

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான அதிகார அத்துமீறல் குறித்து விவரிப்பதற்காக, செராஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கைதிகளின் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் லாவண்யா கலந்து கொண்டார்.

லாவண்யாவின் பொலிஸ் அறிக்கையின்படி, ஏப்ரல் 8-ம் தேதி, அவரது கணவர், சுங்கை ஊடாங் சிறைச்சாலையைச் சேர்ந்த மற்ற கைதிகளுடன், சிரம்பான் நீதிமன்றத்தில் இருந்து திரும்பியப் பின்னர், ஜெலெபு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு, சிறை அதிகாரிகளால் பி.வி.சி. குழாய்களால், கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் தாக்கப்பட்டனர். அதன் பின்னர் இன்னும் பலரால், பிரம்பு, குழாய்கள், கம்புகள், நாற்காலிகள் மற்றும் பிற பொருட்களால் சுமார் ஒரு மணி நேரம் தாக்கப்பட்டனர்.

அவர்களை அடித்தவர்களில் பாதி பேர், சாதாரண டி-சட்டைகளையும், அரைகால் சிலுவார் மற்றும் செருப்பு அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் உண்மையில் சிறை அதிகாரிகளா, இல்லையா என்பது அவரது கணவருக்குத் தெரியவில்லை என லாவண்யா சொன்னார்.

அதன்பிறகு, அவர்கள் ஓர் அறைக்குள் இருவர் இருவராக நுழையும்படி கட்டளையிடப்பட்டு, அவர்களின் உடைகள் மற்றும் உள்ளாடைகளைக் கழற்ற உத்தரவிடப்பட்டனர். சிறை அதிகாரி ஒருவர் அவர்களின் ஆசனவாய் மற்றும் பிறப்புறுப்புகளில் மிளகு தூளைத் தெளிப்பதற்கு முன்பு, துணி இல்லாமல் தரையில் படுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து கைதிகளும் அறைக்குள் நுழைந்த பின்னர், அதிகாரிகள் இரவு வரை அவர்களை இடைவிடாமல் அடிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஏப்ரல் 27-ம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர்கள் முதல் முறையாக கலையரசனைச் சந்திக்க முடிந்தது என்று லாவண்யாவின் உறவினர் எலிஷா தே தெரிவித்தார். இந்த ஆண்டு, சிறையில் அவரைச் சந்திக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது இதுவே முதல் முறையாகும்.

சந்திப்பின் போது, அவரது பிறப்புறுப்பு மற்றும் காயங்களில் இன்னும் இரத்தப்போக்கு இருப்பதாக கலையரசன் கூறியதாக எலிஷா சொன்னார்.

தாக்கப்பட்ட 22 கைதிகளில், ஒருவரைத் தவிர வேறு யாரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படவில்லை – அதுவும் அவருக்குக் காசநோய் கண்டிருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இன்னும் தகவல் கிடைக்கவில்லை

பிரின்ஸ் ஜோனின் கூற்றுப்படி, இதுவரை 10 கைதிகளின் குடும்பங்கள் போலிஸ் புகார் செய்துள்ளனர், மற்ற 12 பேரும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை

இதில் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், ஜெலெபு சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகளில், கலையரசன் உட்பட, பாதி பேர் மட்டுமே சுங்கை ஊடாங் சிறைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் என்றும் பிரின்ஸ் ஜான் கூறினார்.

ஜெலெபு சிறைச்சாலையில், இன்னும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் கதி என்ன என்பது இன்றுவரை அறியப்படவில்லை என்றார்.

லாவண்யா மற்றும் எலிஷாவைத் தவிர, மேலும் பல குடும்ப உறுப்பினர்களும் சிறையில் அந்தந்தக் குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.

இன்னும் ஜெலெபு சிறையில் இருக்கும் கைதிகளின் நிலை குறித்து, சிறையிலிருந்து எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை என்று சில குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஜெலெபு சிறைக்குத் தினசரி தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக, சந்தேகத்தின் பேரில் அந்த 22 கைதிகளும் 2019-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டதாக பிரின்ஸ் ஜான் தெரிவித்தார், கைது செய்யப்பட்ட அனைவரும் இந்தியர்கள்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, சிரம்பான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பணியில் கைதிகள் தற்போது ஈடுபட்டுள்ளதாக எலிஷா தெரிவித்தார். இருப்பினும், அடுத்த விசாரணை ஆகஸ்ட் மாதத்தில்தான் நடைபெறும் என்று அவர் கூறினார்.

இன்னொரு மரணத்தைத் தவிர்க்கவும்

20 முதல் 45 வயதுக்குட்பட்ட அக்கைதிகளுக்கு, இந்தச் சம்பவம் நடந்தது இதுவே முதன்முறை என்று எலிஷா கூறினார்.

அவர் காவல்துறையில் புகார் அளித்தபோது, சிறைச்சாலை இந்தச் சம்பவம் குறித்து ஏற்கனவே புகாரைப் பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் அது வேறு மாதிரியாக இருந்தது என்றும் விசாரணை அதிகாரி அவரிடம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 8-ஆம் தேதி, 22 கைதிகளுக்கு இடையிலானச் சண்டை, அதிகாரிகளை அந்நடவடிக்கை எடுக்கத் தூண்டியது எனச் சிறைச்சாலை அறிக்கை வெளியிட்டுள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்ததாக எலிஷா கூறினார்.

அதிகாரிகளின் பணி விதிமுறைகளைத் தாங்கள் எதிர்க்க விரும்பவில்லை என்று கூறிய பிரின்ஸ் ஜோன், ஆனால் அவர்கள் பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் மீது மிளகு தூள் தெளிக்கும் அளவுக்கு வன்முறையில் ஈடுபடுவது, மனித உரிமை மீறல் ஆகும் என்றார்.

கணபதிக்கு நடந்ததைப் போன்ற மற்றொரு மரணத்தைத் தடுக்க, கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் பேசுவது முக்கியம் என்று தான் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர்-சிலாங்கூர் இளையத் தலைமுறை அமைப்பின் தலைவர் டி மலருவானனும் அதேபோன்றக் கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“அவர்கள் (கைதிகள்) என்ன தவறு செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்களின் தவறுகளுக்காக, நாம் தண்டனை வழங்க முடியும், ஆனால் அவர்களை இப்படி சித்திரவதைச் செய்யக் கூடாது. அவர்கள் தவறு செய்தார்களா, இல்லையா என்பது இன்னும் நமக்குத் தெரியாது, அது காவல்துறையைப் பொறுத்தது.

“இது முந்தைய சம்பவம் (கணபதி) போன்று இருக்க நாங்கள் விரும்பவில்லை, அவ்வளவுதான்.

“இந்தச் சிறை என்பது மறுவாழ்வுக்கான இடம். கைதி அங்குச் செல்கிறார் (அவரது தண்டனையை நிறைவேற்றுகிறார்), அவர் மீண்டும் குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்ல வேண்டும், அவரை நாம் இழந்துவிடக்கூடாது,” என்று அவர் மேலும் கூறினார்.

இதன் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கருத்தை அறிய மலேசியாகினி முயற்சிக்கிறது.