‘உங்கள் தோல்விகளுக்கு மற்றவர்களைக் குறை கூறாதீர்கள், ஐஜிபி’ – ஈங்காட்

இந்திரா காந்தியின் மகள் பிரசானா திக்ஸாவை அவரது முன்னாள் கணவரிடமிருந்து மீட்டுக் கொண்டுவரத் தவறியதற்காக, அப்துல் ஹமீத் படோர் நியாயமற்ற சாக்குகளைச் சொல்லி மற்றவர்களைக் குறை கூறக்கூடாது என்று இந்திரா காந்தி நடவடிக்கை குழு (ஈங்காட்) கூறியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, தேசியக் காவல்துறைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திரா மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செய்கைகள் இந்த வழக்கை கடினமாக்கியது என்று அப்துல் ஹமீட் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

இந்த வழக்கில் தலையிட வேண்டாம் என்று இந்திராவிடம் கேட்டுக்கொண்டதாக அப்துல் ஹமீட் கூறினார்.

“ஆனால் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. என்ன நடந்தது, பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அறிக்கைகளை வெளியிட்டு, இங்கேயும் அங்கேயும் விமர்சிக்க தொடங்கின.

“அவர் நாட்டில் இருந்தால் சுலபமாக இருக்கும், ஆனால் அவர் வெளிநாட்டில் இருக்கிறார். அதுதான் பிரச்சனையே. நாம் வெறுமனே (வேறொரு நாட்டிற்குள்) நுழைந்து அவரை வீட்டிற்கு அழைத்து வர முடியாது. நாம் ஓர் அரசியல் செயல்திற அணுகுமுறையை எடுக்க வேண்டும்.

“[…] கடந்த ஆண்டு, இந்த வழக்கு ஒரு பெரிய வளர்ச்சியை அடைந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஆனால் இந்த இடையூறுகள் காரணமாக, அது அவரைப் (ரிட்டுவான்) பயமுறுத்தியது, அதனால் தற்காலிகமாக தகவல்தொடர்புகளைத் துண்டித்துவிட்டது,” என்று அவர் நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

2009-ஆம் ஆண்டில், அவரது தந்தை – முன்பு கே பத்மநாதன் என்று அழைக்கப்பட்டவர் – இஸ்லாத்திற்கு மாறிய பின்னர், அப்போது குழந்தையாக இருந்த பிரசானாவை அவர் தன்னுடன் தூக்கிச் சென்றார்.

ரிட்டுவான் ஒருதலைப்பட்சமாக மற்ற இரண்டு குழந்தைகளையும் இஸ்லாத்திற்கு மாற்றினார்.

ஜனவரி 2018-இல், பிரசானா மற்றும் அவரது இரண்டு உடன்பிறப்புகளை இஸ்லாத்திற்கு மாற்றியதை ஃபெடரல் நீதிமன்றம் இரத்து செய்தது.

மேலும், ரிட்டுவான் மீது கைது ஆணையும் பிறப்பித்தது.

அப்துல் ஹமீட்டுக்குப் பதிலளித்த ஈங்காட் தலைவர் அருண் துரைசாமி, ஐ.ஜி.பி. தனது தோல்விகளுக்கு மற்றவர்களைக் குறை சொல்லக்கூடாது என்று கூறினார்.

ஐ.ஜி.பியிடம், அவர் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நான் சொல்ல விரும்புகிறேன் – ‘தற்போது வெற்றி-நிலைமையில் இருக்கிறோம்’, ‘ஒரு மகிழ்ச்சியான முடிவு (இந்த வழக்குக்கு) வரும்’, ‘அவர் (ரிட்டுவான்) எங்கே இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்’, ‘நான் அவருடன் தொடர்பு கொண்டேன் ஓர் அரசியல்வாதியின் உதவியுடன்’… – இதுபோன்ற இனிமையான வார்த்தைகளால் மூடப்பட்டதுதான் அவரது வாக்குறுதிகள். அதுதா அவர்.

“தோல்விக்கு ஒரு காரணமாக இதைப் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்,” என்று மலேசியாகினியிடம் அருண் கூறினார்.

பிரசானாவை இந்திராவிடம் மீண்டும் கொண்டு வரும் முயற்சியில், அப்துல் ஹமீட் மற்றும் காவல்துறையினருடன் ஒத்துழைக்க மற்றும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள, ஈங்காட் எப்போதும் வழிகளைத் தேடி வந்தது என்று அருண் கூறினார்.

இருப்பினும், எந்தவொரு வளர்ச்சியும் இல்லாததில் ஏமாற்றமடைந்த ஈங்காட், பிரசானாவை வீட்டிற்கு அழைத்து வரும் முயற்சிகளை மேற்கொண்டது.

“நான் இன்று அவரிடம் (அப்துல் ஹமீட்) சொல்கிறேன் – இது இந்திராவிற்கும் நாட்டிற்கும் நான் கொடுக்கும் வாக்குறுதி, விரைவில் நாங்கள் பிரசானாவை வீட்டிற்குக் கொண்டு வருவோம்.

“[…] பிரசானாவை வீட்டிற்கு அழைத்து வர, ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் எங்களுக்கு உரிமை உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்திராவின் முன்னாள் கணவர் மலேசியாவில் இல்லை என்று அப்துல் ஹமீட் முன்பு கூறியிருந்தார்.

அவர் திங்களன்று ஓய்வு பெறுவார், அவருக்குப் பதிலாக அவரது துணை அக்ரில் சானி அப்துல்லா சானி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் கொடுத்த வாக்குறுதிகள் மற்றும் ஏமாற்றங்களின் அடிப்படையில், அக்ரில் சானி பிரசானாவை இந்திராவிடம் கொண்டு வருவார் என்பதில் ஈங்காட் எந்த நம்பிக்கையும் வைக்கவில்லை என்றும் அருண் சொன்னார்.