மறைந்த ஏ கணபதியின் மரணத்திற்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வழிவகுக்கும் தகவல்களை வழங்குவோருக்கு RM10,000 வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் குடும்ப வழக்கறிஞரான கே கணேஷின் கூற்றுப்படி, இந்தச் சலுகை அடையாளம் கூற மறுத்துவிட்ட ஒரு நபரின் பங்களிப்பாகும். அந்நபரும் இறந்தவரின் ஒத்த சூழ்நிலையை எதிர்கொண்டதாகக் கணேஷ் கூறினார்.
“இப்போது, குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாததால், பொறுப்பானவர்களைக் கைது செய்யவோ அல்லது தண்டிக்கவோ வழிவகுக்கும் எந்தவொரு தகவலுக்கும் RM10,000 பரிசு வழங்குமாறு என்னிடம் கேட்கப்பட்டுள்ளது.
“… மறைந்த கணபதியின் மரணத்திற்கு எதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ,” என்று அவர் கூறினார்.
இறந்தவரின் இல்லத்தில், கணபதிக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த கணேஷ் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கணபதியின் தாயார் எஸ் தனலெட்சுமி மற்றும் அவரது சகோதரி ஏ தங்கமலர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இறந்தவரின் குடும்பத்தினரைச் சந்திக்க, ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வீ கியாட் மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி பிரபாகரன் ஆகியோரும் வருகை தந்தனர்.
மார்ச் மாதத்தில், கணபதி தடுப்புக் காவலில் கடுமையாகத் தாக்கப்பட்டதன் விளைவாக, அவரது கால் துண்டிக்கப்பட்டு, மரணமடைந்தார் எனக் கூறி தனலெட்சுமி போலிஸ் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.
கணபதி செலயாங் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
அவர் ஏப்ரல் 18-ம் தேதி காலமானார்.
முன்னதாக நேற்றையச் செய்தியாளர் சந்திப்பில், கணபதி மரணம் தொடர்பாக கடந்த மாதம் இறுதியில் கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அரிஃபாய் தாராவே அளித்த முந்தைய அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, கணேஷ் ஊடக அறிக்கை ஒன்றையும் விநியோகித்தார்.
அரிஃபாயின் அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாகக் கணேஷ் கூறினார்.
கணபதி காவலில் இருந்தபோது தாக்கப்பட்டார் என அவரது தாயாரின் புகார் குறித்து, “விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன” என்று ஆரிஃபாய் குறிப்பிட்டுள்ளார் என கணேஷ் கூறினார்.
அப்படியிருந்தும், அதே அறிக்கையில், விசாரணைக் கட்டுரை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு (ஏஜிசி) “ஒரு சட்டத் தேர்வாராய்ச்சி முன்மொழிவுடன்” (inquest) அனுப்பப்படும் என்றும் அரிஃபாய் கூறியுள்ளார் என்பதனைக் கணேஷ் சுட்டிக்காட்டினார்.
“… இது அவர்களின் விசாரணை ஒரு முட்டுச்சந்தை எட்டியுள்ளது என்பதையும், ஒரு சட்டத் தேர்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
கணபதி மீண்டும் காவலில் வைக்கப்பட்ட 12 நாட்களில், காவல்துறை ஏன் அவரிடம் விளக்க அறிக்கையை எடுக்கவில்லை என்றும், அதற்கு கணபதியின் உடல்நிலை அனுமதிக்கவில்லையா என்றும் கணேஷ் கேள்வி எழுப்பினார்.
அரிஃபாயின் அறிக்கையின் அடிப்படையில், தடுப்புக் காவலில் இருந்தபோது, இறந்தவரை நான்கு முறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது, இருப்பினும், மருத்துவமனை ஏன் கணபதியை மீண்டும் மீண்டும் காவலில் வைக்க அழைத்துச் செல்ல அனுமதித்தது என்றும் கணேஷ் கேள்வி எழுப்பினார்.
இது, கணபதிக்குச் சிகிச்சை தேவை என்பதைக் காட்டுகிறது என்றார் அவர்.
கணபதியின் மரணத்திற்கு, சிகிச்சை அளிக்கப்படாத காயங்களும்கூட காரணம் எனக் கூறப்படுகிறது எனக் கணேஷ் கூறினார்.
இதனால், கணேஷ் அரிஃபாய் இராஜினாமா செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
“அவரது மேற்பார்வையில், ஒருவர் இறந்துவிட்டார் (காவலில்),” என்று கணேஷ் கூறினார்.