கடந்த வெள்ளிக்கிழமை, பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல் நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஊழல் நடந்திருக்கிறது என முன்னாள் காவற்படைத் தலைவர் கூறியுள்ளது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) விசாரிக்க வேண்டும் என்று பி.கே.ஆர். இன்று வலியுறுத்தியுள்ளது.
பி.கே.ஆர். தலைமை செயலாளர் சைஃபுட்டின் நாசுதியோன் இஸ்மாயில், அப்துல் ஹமீட் வெளியிட்டுள்ள தகவலைச் சாதாரணமாகக் கருத முடியாது, எம்.ஏ.சி.சி. குற்றச்சாட்டுகள் குறித்து மௌனமாக இருக்க முடியாது என்றார்.
“அப்துல் ஹமீட்டின் சமீபத்தியக் குற்றச்சாட்டு எங்களுக்கு ஒன்றும் புதியதல்ல, இது எங்களின் முந்தைய அறிக்கையை மட்டுமே உறுதிப்படுத்துகிறது. பந்து இப்போது எம்.ஏ.சி.சி. காலடியில் உள்ளது, இந்தத் தகவலை வெளியிட்டவர், ஒரு சாதாரண மனிதர் அல்ல, அவர் தேசியக் காவல்துறைத் தலைவர்.
“எம்.ஏ.சி.சி அமைதியாக இருக்க முடிவு செய்தால், அது நம் நாட்டுக்கு துரதிர்ஷ்டவசமானது. எம்.ஏ.சி.சி.யின் நடவடிக்கைகள் ஒருதலைப் பட்சமாக இருக்கக்கூடாது,” என்று பி.கே.ஆர். தலைமையகத்தில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை, அப்துல் ஹமீட் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கடமைகள் தொடர்பான பல தகவல்களை வெளியிட்டார்.
அவற்றுள், பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் ஊழல் குறித்து விசாரிக்குமாறு எம்.ஏ.சி.சி.யிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
பெர்சத்து பல எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கூட்டணியைக் கவிழ்த்ததிலிருந்து, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் முஹைதீன் யாசினுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர்.
பெர்சத்து தலைவருக்குப் பின்னால் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உண்மையான ஆதரவு நிலைப்பாடு சர்ச்சைக்குள்ளான நேரத்தில், யாங் டி-பெர்த்துவான் அகோங்கிடம், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தம் செய்யுமாறு அரசாங்கம் வலியுறுத்தியது.
இதற்கு முன்பே, தேசியக் கூட்டணி பக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஈர்ப்பதற்காக, பல பதவிகளை அவர்களுக்குக் கொடுக்கும் பரிந்துரை தொடர்பான ஆடியோ பதிவு ஒன்று முஹைதீனுடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் அசாம் பாக்கியுடன் ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார், கட்சித் தாண்டலுக்குக் கையூட்டு வழங்கப்படுகிறது என்பதனைப் பி.கே.ஆர். எம்.பி.க்கள் ஒப்புக் கொண்டதை அடுத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.