கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் மற்றும் ஜொகூர், பேராக் மற்றும் திரெங்கானு மாநிலங்களின் சில மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி) செயல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தப் பி.கே.பி., மே 7 தொடங்கி மே 20 வரை அமலில் இருக்கும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் விளக்கக்காட்சி மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
“ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 27, 2021 வரை, கோலாலம்பூர் முழுவதும் மொத்தம் 17 புதிய திரளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது, தினசரி நேர்வுகளும் அதிகரித்து வருகின்றன,” என்று அவர் இன்று தெரிவித்தார்.
இந்த முறையும், பி.கே.பியின் எஸ்ஓபி-க்கள் முன்பு அறிவித்ததைப் போலவே உள்ளன என்று இஸ்மாயில் கூறினார்.
ஜொகூரில், ஜொகூர் பாரு, கூலாய் மற்றும் கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களில் பி.கே.பி. அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.
மேலும், பேராக்கில், முகிம் தைப்பிங், லாருட், மாத்தாங் மற்றும் செலாமா மாவட்டங்களிலும்; திரெங்கானுவில், பெசூட் மாவட்டத்தில் 14 முகிம்களிலும் பி.கே.பி. அமல்படுத்தப்பட்டுள்ளது
பி.கே.பி.யின் எஸ்ஓபி-க்கள் முன்பு அறிவித்ததைப் போன்றது என்ற அவர், மேலும் தகவலுக்கு, எம்.கே.என். வலைத்தளத்தைப் பார்க்கவும் https://www.mkn.gov.my என்றார்.
அமைக்கப்பட்ட எஸ்ஓபி-களில் சில :
- வேலை மற்றும் அவசரகால விஷயங்களைத் தவிர, மாநில எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படாது.
- உணவு விநியோகிக்கும் வளாகங்கள், காலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், உணவகத்தில் உணவருந்த அனுமதி இல்லை, வீட்டிற்கு எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதி.
- மளிகைக் கடைகள், பல்வகை பொருள் விற்பனை கடைகள் மற்றும் மருந்தகங்கள் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
- பெட்ரோல் நிலையங்கள் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன, இருப்பினும் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
- மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்கள் வழக்கம் போல் செயல்பட முடியும்.
- தினசரி சந்தைகள், உழவர் சந்தைகள், பொதுச் சந்தைகள் மற்றும் வாராந்திர சந்தைகள் காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
- பி.கே.பி பகுதிகளில் உள்ள ரமலான் சந்தைகள் கடுமையான எஸ்ஓபி-க்களுடன் செயல்பட இன்னும் அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், அவற்றின் நடவடிக்கைகளைத் தொடர்வதா அல்லது மூடுவதா என்பதான முடிவு உள்ளாட்சி ஆணையம் மற்றும் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
நேற்று, சிலாங்கூரில், பெட்டாலிங், உலு லங்காட், கோம்பாக், கிள்ளான், கோல லங்காட் மற்றும் செப்பாங் ஆகிய மாவட்டங்களில், நாளை தொடங்கி மே 17 வரை பி.கே.பி அமலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்தது.