அயின் : நாடாளுமன்றத்தின் ஆபாச நகைச்சுவைகள் வகுப்பறையில் தொடங்குகின்றன

பாலியல் வல்லுறவு நகைச்சுவை தவறான ஒன்று என்று மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும், இல்லையென்றால் அவர்கள் பெரியவர்களைப் போலவே பேசுவார்கள் என்று இடைநிலைப் பள்ளி மாணவி அயின் ஹுஸ்னிஸா சைஃபுல் நிஸாம் கூறினார்.

பள்ளிகளில் இது ஒரு சாதாரண விஷயமாக மாறாமல் இருக்க, ‘பாலியல் வல்லுறவு கலாச்சாரத்தை’ அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்ற தேவை ஏற்பட்டதற்கு இதுவே காரணம் என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் மற்றும் கார்ட்டூனிஸ்ட் ஸூனார்-உடன் நேற்றிரவு நடந்த இயங்கலை கருத்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார்.

முன்னதாக, ஆபாச நகைச்சுவைகள் பள்ளிகளில் தொடங்கி, நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளால் கூட செய்யப்படும் ஒரு பழக்கமாக மாறி வருகிறது என்று ஸூனார் கூறினார்.

“பள்ளிகளில் இந்த நகைச்சுவைகள் சாதாரணமான ஒன்றாகக் கருதி அனுமதிக்கப்படுகின்றன.

“இறுதியில், நம் நாடாளுமன்றத்தையும் அதுபோன்ற நகைச்சுவைகள் வந்தடைவதை நாம் காண்கிறோம். சில நேரங்களில், நாடாளுமன்றத்தில் உள்ளவர்களுக்குத் தண்டனை கிடைப்பதில்லி,” என்றார் ஸூனார்.

அயினின் கூற்றுப்படி, நாட்டில் கல்வி முறை தோல்வியடைந்த நிலையை இது காட்டுகிறது.

“ஏனென்றால், அது தவறு என்று அவர்களுக்குப் புரியவில்லை. அதுதான்… இந்தச் செயல் தவறு எனக் கற்பிக்காத நமது கல்வி முறையின் தவறு. கல்விதுறையில் மட்டுமே கவனம் செலுத்தி, நமது மாணவர்களின் ஒழுக்கம், நடத்தை மற்றும் நெறிமுறைகளில் கவனம் செலுத்தத் தவறிவிட்டோம்,” என்று அவர் கூறினார்.

இந்தக் கருத்துக்கு உடன்பட்ட அன்வர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறும் ஆபாச நகைச்சுவைகளை நாடாளுமன்றமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று கூறினார்.

“நாடாளுமன்றம்… அவர்களுக்குத் தெரியாது என்றில்லை, ஆனால் நம்முடைய அமைப்பு அதை அனுமதிக்கிறது. நகைச்சுவைகள் ஆபாசமாக இருக்கலாம், ஆனால் ஆபாசம் கூடாது. கேலிகள் முடியும், ஆனால் யாரையும் அவமதிக்கக்கூடாது. வேடிக்கைப் பேச்சுகள் முடியும், ஆனால் ஒடுக்குமுறை கூடாது.

“ஆனால் நாடாளுமன்றத்தில் இதுபோன்ற உரையாடல் இருக்கும்போது, ​​சில சமயங்களில் சபா நாயகர்கூட – அவருக்கு ஒழுக்கநெறிகள் மற்றும் நெறிமுறைகள் பற்றிய கேள்வி முக்கியமல்ல,” என்று அன்வர் கூறினார்.

கடந்த ஆண்டு, பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் அப்துல் ரஹீம், பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவுக்கு எதிராக இனவெறி மற்றும் பாலியல் ரீதியான கூற்றை வெளியிட்டார்.

சபாநாயகர் அஸார் அஸிஸான் ஹருன், சம்பவம் நடந்தபோது அதற்கு எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டார். பின்னர் அஸிஸ் மன்னிப்பு கேட்டு, அவரது வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்று அஸார் அறிவுறுத்தினார்.

2015-ஆம் ஆண்டில், பெண்களின் மாதவிடாய் சுழற்சிகள் குறித்து மக்களவையில் வெளியிடப்பட்ட பாலியல் கருத்துக்களை அஸிஸ் திரும்பப் பெற வேண்டியிருந்தது.

2016-ஆம் ஆண்டில், துணையமைச்சர் தாஜுட்டின் அப்துல் இரஹ்மான், செபுத்தே எம்.பி. தெரசா கோக்கின் பெயரை, ஆண் உறுப்புடன் ஒப்பிட்டு பேசியதற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

2007-ஆம் ஆண்டில், கினாபாத்தாங்கான் எம்.பி. போங் மொக்தார் ராடின் மற்றும் ஜாசின் எம்.பி. மொஹமட் சையத் யூசோப் இருவரும், மக்களவையில் பத்து காஜா எம்.பி. ஃபோங் போ குவானைப் பாலியல் ரீதியாகக் கேலி செய்தனர்.

இருப்பினும் அவர்கள் மன்னிப்பு கேட்டு தங்கள் கருத்துக்களை மீட்டுக்கொண்டதால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.