எஸ்.ஓ.பி. கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த கே.டி.என். உத்தரவு

கண்காணிப்பு நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அறிவிக்கப்பட்ட செந்தர இயங்குதல் நடைமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அமலாக்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சு (கே.டி.என்.) அறிவுறுத்தியுள்ளது.

அரச மலேசியக் காவற்படை, குடிநுழைவுத் துறை, சிறைச்சாலைத் துறை, மலேசியத் தன்னார்வத் துறை (ரேலா), சபா கிழக்குக் கடற்கரை சிறப்பு பாதுகாப்பு பகுதி (இ.எஸ்.எஸ்.காம்), தேசியப் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

கோவிட் -19 தொற்றுநோயைப் பரவலை மிகவும் திறமையாகவும் விரிவாகவும் கட்டுப்படுத்துவதை உறுதி செய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக அடுத்த வாரம் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கு முன்னதாக என, இன்று ஓர் அறிக்கையில் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பணியாளர்கள் மற்றும் சாலைத் தடுப்பு நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கே.டி.எம். கொமுட்டர், எல்.ஆர்.டி., எம்.ஆர்.டி., ஈ.ஆர்.எல்., கே.எல். மோனோரெயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி மாநிலங்கள் அல்லது மாவட்டங்களைக் கடக்க வாய்ப்புள்ள நபர்களைத் தடுக்கவும் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

“உள்துறை அமைச்சு, நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. மேலும், அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எஸ்.ஓ.பி-உடன் இணங்காதப் பிரச்சினைகள் குறித்து துறைகள் மற்றும் அமலாக்க நிறுவனங்களிடமிருந்து பல புகார்களைப் பெற்றுள்ளது,” என்று அது சொன்னது.

கோவிட் -19 நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக, சிலாங்கூர், ஜொகூர், திரெங்கானு, பேராக், கிளந்தான் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும்,  கோலாலம்பூர் முழுவதும் பி.கே.பி. செயல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.

பி.கே.பி. அமல்படுத்தப்பட்டதிலிருந்து, இன்றுவரை, உள்துறை அமைச்சின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 100,980 உறுப்பினர்கள் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்ட எஸ்.ஓ.பி.க்களுக்குத் தொடர்ந்து இணங்கவும், கோவிட் -19 தொற்றுநோய்களின் அச்சுறுத்தலில் இருந்து மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான அனைத்து அரசாங்க முயற்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென உள்துறை அமைச்சு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது.

  • பெர்னாமா