இன்று 4,519 புதிய நேர்வுகள், 25 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 4,519 கோவிட் -19 புதிய நேர்வுகளும் 25 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

“கோலாலம்பூர் மற்றும் சரவாக்கில் தலா ஐந்து மரணங்களும், சிலாங்கூர் மற்றும் ஜொகூரில் தலா நான்கு மரணங்களும், கிளந்தான் மற்றும் கெடாவில் தலா இரண்டு மரணங்களும், சபா, பேராக் மற்றும் பினாங்கில் தலா ஒரு மரணமும் புகாரளிக்கப்பட்டுள்ள,” என்று அவர் கூறினார்.

ஆக, இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,657 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே, இன்று 2,719 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 210 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1,722), கோலாலம்பூர் (557), சரவாக் (479), கிளந்தான் (373), பினாங்கு (363), ஜொகூர் (288), கெடா (183), பேராக் (108), மலாக்கா (100), பஹாங் (99), நெகிரி செம்பிலான் (98), திரெங்கானு (71),  சபா (63), புத்ராஜெயா (12), லாபுவான் (2), பெர்லிஸ் (1).

மாநில எல்லைகளைக் கடந்ததனால் நேர்ந்த 14 திரளைகள் செயலில் உள்ளதாக டாக்டர் ஹிஷாம் தெரிவித்தார். இதில் தென் ஆப்பிரிக்க வெரியண்ட் B.1.351 வகை கிருமி கண்டறியப்பட்டுள்ளதால், மாநில எல்லைகளைக் கடக்கும் தடைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

தென் ஆப்பிரிக்க வெரியண்ட் B.1.351 கிளந்தான் மாநிலத்தில் பரவியுள்ளதாக நம்பப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இன்று 16 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன.