அம்னோ : கோவிட் -19 உச்சத்தில் இருக்கும்போது ஜிஇ15 தேவையில்லை

கோவிட் -19 தொற்றுநோய் அதிகரித்து வரும் பட்சத்தில், ஆகஸ்ட் வரையிலும் கூட, 15-வது பொதுத் தேர்தலை (ஜிஇ15) நடத்துமாறு கட்டாயப்படுத்த அம்னோ விரும்பவில்லை.

அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுட்டின் அப்துல் இரஹ்மான் கூறுகையில், கட்சி மக்களின் நலன்களுக்கு முதலிடம் அளிக்கிறது, பொது சுகாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பதவிகளைத் துரத்தி கொண்டிருக்கவில்லை.

“ஆகஸ்ட் மாதத்தில் இன்னும் அதிகமான கோவிட் -19 நேர்வுகள் இருந்தால், ஜிஇ15-ஐ முன்மொழிய முடியாது. அம்னோ தலைவர்கள் மூளை இல்லாதவர்கள் அல்ல, பதவி வெறி பிடித்தவர்கள் அல்ல.

“கோவிட் -19 நிலைமையை நாங்கள் கவனிக்கிறோம். நிலைமை அனுமதித்தால் ஆகஸ்டில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று நான் நம்புகிறேன். ஆனால், நேர்வுகள் அதிகமாக இருந்தால், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் இருந்தால், ஜிஇ-ஐ நடத்த சரியான நேரத்தை மறுபரிசீலனை செய்வோம்.

“நேரம் வரும்போது நாங்கள் அதைச் செய்வோம். கோவிட் -19 நிலைமைக்கு நாம் கட்டுப்பட வேண்டும்,” என்று அந்த பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம், அம்னோ தலைவர் டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, தேர்தல் ஆணையம் (இசி) பொதுத் தேர்தலுக்கான ஓர் எஸ்ஓபி-ஐ அமைக்கும் என்று கட்சி நம்புகிறது, 30-க்கும் மேற்பட்ட நாடுகளில், அமெரிக்கா உட்பட, கோவிட் -19 தொற்றின் போது பொதுத் தேர்தலை நடத்தினர் எனக் கூறி ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் அம்னோ 2020 பொதுக் கூட்டத்தில், அவசர காலம் முடிந்தபின், ஜிஇ15 நடத்தப்பட வேண்டும் என்று அம்னோ கோரியது குறிப்பிடத்தக்கது.

  • பெர்னாமா