பொது, தனியார் மருத்துவமனை ஐ.சி.யூ. படுக்கைகள் நிரம்பியுள்ளன

கோவிட் -19 தொற்றுக்கான அவசரச் சிகிச்சைப் பிரிவு (ஐ.சி.யூ.) படுக்கைகள் பெருகிய முறையில் நோயாளிகளால் நிரம்பியிருப்பதால், சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சுகாதார அமைப்பு சரிவடையாமல் இருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரினார்.

இரண்டு மாதங்களுக்கும் மேலான பிறகு, தனது முதல் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள ஐந்து மருத்துவமனைகள் ஏற்கனவே திறனில்லாமல் செயல்படுவதைக் காட்டும் தரவை வழங்கினார்.

நாடு முழுவதும், 19 பொது மருத்துவமனைகளில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான கோவிட் -19 ஐ.சி.யூ. படுக்கைகள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளன.

“நாம் மோசமானதொரு நிலையில் இருப்பதால் எஸ்.ஓ.பி. நடைமுறைகளைக் கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து குடிமக்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

“பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஐ.சி.யூ. மற்றும் நோயாளிகளின் படுக்கைகள் (கோவிட் -19) நிரம்பி வருகின்றன.

“நீங்கள் எங்களுக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுக்க முடியுமானால், அது எங்களுக்கு (அக்காலகட்டத்தில்) ஓர் இடையகத்தைத் தயார் செய்து, மறுசீரமைக்க முடியும். இதன்வழி மருத்துவமனைகள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்,” என்றார் அவர்.

ஐ.சி.யூ. படுக்கைகள் மட்டுமின்றி, மற்ற படுக்கைகளும் நிரம்பி வருகின்றன.

மே 8-ஆம் தேதி நிலவரப்படி, அம்பாங் மருத்துவமனையில் மூன்று கோவிட் -19 படுக்கைகள் மட்டுமே உள்ளன, செலயாங் மருத்துவமனையில் இன்னும் நான்கு படுக்கைகள் மட்டுமே உள்ளன.

நாடு முழுவதும், 32 பொது மருத்துவமனைகளில், கோவிட் -19 நேர்வுகளுக்காக 70 விழுக்காடு ஐ.சி.யூ. அல்லாத படுக்கைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஏழு மாநிலங்கள் மற்றும் கூட்டரசுப் பிரதேசங்களில் கோவிட் -19 படுக்கை பயன்பாட்டு விகிதங்கள் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது – ஜொகூர் (92 விழுக்காடு), மலாக்கா (90 விழுக்காடு), கிளந்தான் (84 விழுக்காடு), சரவாக் (83 விழுக்காடு), சிலாங்கூர் (82 விழுக்காடு), கோலாலம்பூர் (72 விழுக்காடு), கெடா (72 விழுக்காடு).

மலேசியா உயர் எண்ணிக்கையிலான ஐ.சி.யு. படுக்கைகளின் பயன்பாட்டைக் காண்கிறது – தொற்று பரவியவர்கள் மற்றும் சுவாசக் கருவி பயன்படுத்துபவர்கள் என அனைத்து நோயாளிகளுக்கும். இது கோவிட்-19 இன் மிகக் கடுமையான மற்றும் ஆபத்தான தருணமாகும்.

நேற்று, நூர் ஹிஷாம் மொத்தம் 506 உறுதிப்படுத்தப்பட்ட, சாத்தியமான மற்றும் சந்தேகத்திற்குரியக் கோவிட் -19 நோயாளிகள் தீவிரச் சிகிச்சை பிரிவில் இருப்பதாகத் தெரிவித்தார்.

“உங்களுக்கு தொற்று ஏற்பட்டால், மருத்துவமனைக்கு வருகிறீர்கள், ஆனால் எங்களிடம் போதுமான ஐ.சி.யூ. படுக்கைகள் இல்லை, நாங்கள் சிக்கலில் இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.