ஹாட்ஸ்பாட்ஸ் ஐடென்டிஃபிகேஷன் ஃபார் டைனமிக் எங்கேஜ்மண்ட் (எச்.ஐ.டி.இ.) (Hotspots Identification for Dynamic Engagement – HIDE) கீழ், ஆரம்ப எச்சரிக்கை முறையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பொது போக்குவரத்து நிலையங்கள் மற்றும் டெர்மினல்களின் சேவைகளும் தொடர்ந்து செயல்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்று எல்.ஆர்.டி. நிலையங்கள் உட்பட, எச்.ஐ.டி.இ. அமைப்பில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வளாகங்களும் மூன்று நாட்களுக்கு மூடப்பட வேண்டும், இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்) அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியானது.
சம்பந்தப்பட்ட மூன்று நிலையங்கள், கே.எல்.சி.சி. நிலையம், மஸ்ஜிட் ஜாமேக் மற்றும் கே.எல். சென்ட்ரல் ஆகும்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட நிலையங்களில் அமைந்துள்ள அனைத்து வணிக வளாகங்களும் மூடப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
“பொது போக்குவரத்து சேவைகள் நாட்டிற்கு மிகவும் முக்கியம், குறிப்பாக சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) காலத்தில்கூட தொடர்ச்சியான நடவடிக்கைகளை நம்பியிருக்கும் முனைமுகப் பணியாளர்களுக்கு.
“அவசரநிலை ஏற்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களை இடம் மாற்றுவதற்கும் வழங்குவதற்கும் அனைத்து பொதுப் போக்குவரத்து நிலையங்களும் எப்போதும் திறந்திருக்க வேண்டும்,” என்று அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு புதிய எச்சரிக்கை முறையை அரசாங்கம் பயன்படுத்துகிறது, இதன்மூலம் ஒரு பகுதி அல்லது வளாகம் தொற்றுநோய் இலகுவாகப் பரவும் இடமாக இருக்கலாம் என்று கணிக்க முடியும்.
பெரியத் தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயக்கப்படும் முன்னும் பின்னுமான தொடர்புகளைக் கண்டறிதல் மூலம் இது செயல்படுகிறது.
எச்.ஐ.டி.இ.யில் பட்டியலிடப்பட்டுள்ள இடங்களை அரசாங்கம் நேற்று அறிவித்தது, அவ்விடங்களில் கடுமையான எஸ்.ஓ.பி. இணக்கத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
இருப்பினும், எச்.ஐ.டி.இ. என அடையாளம் காணப்பட்ட வளாகங்களை உடனடியாக மூன்று நாட்களுக்கு மூட வேண்டும் என்று எம்.கே.என். உத்தரவிட்டது.
நேற்றிரவு, திங்கள் முதல் மூடப்படும் என்று ஒரு விளக்கப்படத்தை வெளியிட்ட எம்.கே.என்., பின்னர் அதனை நள்ளிரவில் திரும்பப் பெற்றபோது குழப்பம் எழுந்தது.