RM2 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள சிகரெட், மதுபானம், பட்டாசுகள் பறிமுதல்

கடந்த ஒரு வாரமாக, சிலாங்கூர் மற்றும் ஜொகூரில் நடத்தப்பட்ட ஆறு சோதனைகளில், கடத்தப்படுவதாக நம்பப்படும் RM2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள, சிகரெட்டுகள், மதுபானம் மற்றும் பட்டாசுகளைப் பொது செயல்பாட்டு படை (பிஜிஏ) பறிமுதல் செய்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, நேற்று வரை நடந்த இந்தச் சோதனைகளில் 33 முதல் 64 வயதுக்குட்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செராஸ் பிஜிஏ மத்தியப் படைப்பிரிவு தளபதி எஸ்ஏசி முஹம்மது அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

“மே 2-ம் தேதி, மதியம் 2.30 மணியளவில் நடந்த முதல் சோதனையில், கடத்தப்பட்டதாக நம்பப்படும் RM135,998 மதிப்புள்ள பல்வேறு வகையான சிகரெட்டுகள் மற்றும் பட்டாசுகளை ஜொகூர், பத்து பஹாட்டில் உள்ள ஒரு வளாகத்தில் நாங்கள் கைப்பற்றினோம்.

“திங்களன்று, மாலை 4.00 மணியளவில் நடந்த இரண்டாவது சோதனையில், காஜாங், சுங்கை தங்காஸில், RM509,600 மதிப்புள்ள பல்வேறு வகையான பட்டாசுகளை நாங்கள் கைப்பற்றினோம்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஜொகூர், பாசீர் கூடாங்கில் நடந்த மூன்றாவது சோதனையில், RM115,318 மதிப்புள்ள பல்வேறு வகையான பட்டாசுகளைக் கைப்பற்றியதாகவும் அவர் சொன்னார்.

அதே நாளில், காலை 11 மணியளவில் நான்காவது சோதனை, ஜொகூர், மூவாரில் நடத்தப்பட்டதாக முஹமட் கூறினார். அங்குக் கடத்தப்பட்டதாக நம்பப்படும் RM352,350 மதிப்புள்ள பல்வேறு வகையான பட்டாசுகளைப் பறிமுதல் செய்ததாகவும், மதியம் 12.30 மணியளவில், ஜொகூர் ஸ்கூடாயில், RM913,000 மதிப்புள்ள சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்ததாகவும் அவர் மேலும் சொன்னார்.

நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட ஒரு சோதனையில், மாலை 4.45 மணியளவில் ஷா ஆலம் அருகே உள்ள தாமான் டேசா சுபாங்கில், மூன்று டன் லாரியைப் பரிசோதித்த போது, அதில் RM288,964 மதிப்புள்ள பல்வேறு வகையான மதுபானங்களைப் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.

இந்த வழக்குகள் வெடிபொருள் சட்டம் 1957-இன் பிரிவு 8 மற்றும் சுங்கச் சட்டம் 1967-இன் பிரிவு 135 (1) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படும் என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா