நாட்டில் டயர் தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதன் மூலம், சுணக்கம் கண்டுவரும் நாட்டின் இரப்பர் தொழிற்துறையை மீண்டும் புதுப்பிக்க முடியும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் பொருட்கள் அமைச்சர் டாக்டர் மொஹமட் கைருட்டின் அமான் ரசாலி தெரிவித்தார்.
நாட்டின் இரப்பர் தொழில்துறையை மீட்க முடியும் என்றும், அந்தப் பொருட்களின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“மலேசிய இரப்பர் வாரியமும் (எல்.ஜி.எம்.), மலேசிய இரப்பர் மன்றமும் (எம்.ஆர்.சி.) டயர் தொழிற்துறைக்குப் புத்துயிர் அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன, காரணம் இதற்கு ஒரு பெரிய சந்தை மதிப்பு உள்ளது, மேலும் இதனால் இரப்பர் துறையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்,” என்று அவர் இன்று பாடாங் பெசாரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, பாடாங் பெசார் அருகே உள்ள புக்கிட் கெராங் மண்டபத்தில், கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட 100 இரப்பர் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு நன்கொடைகளை அவர் வழங்கினார்.
“முன்பு, நாட்டின் இரப்பர் உற்பத்திகள், டயர்களை உருவாக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன, ஆனால் நாம் நமது சொந்தப் பொருட்களைத் தயாரிப்பது மிகவும் நல்லது,” என்று அவர் கூறினார்.
முதலீடு செய்ய ஆர்வமுள்ள உள்ளூர் முதலீட்டாளர்களைத் தனது தரப்பு அடையாளம் கண்டுள்ளது என்றும், பின்னர் அது அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“இதற்குப் பிறகு, எங்களுடன் பணியாற்ற விரும்பும் நிறுவனங்கள், முதலீட்டின் மொத்த மதிப்பு மற்றும் இரப்பர் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்,” என்று அவர் கூறினார்.
தொழிலில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் சம்பந்தப்பட்ட முதல் கூட்டம், நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு நடத்தப்படும் என்றும் கைருட்டின் கூறினார்.
- பெர்னாமா