பணி செயற்பாடுகளை வலுப்படுத்த, பி.எச். 9 செயற்குழுக்களை அமைத்தது

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) இன்று மத்திய அரசைக் கைப்பற்றிய மூன்றாம் ஆண்டு நினைவு நாளில், அக்கூட்டணி உறுப்புக் கட்சிகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் பல செயற்குழுக்களை நிறுவுவதாக அறிவித்தது.

பி.கே.ஆர், டி.ஏ.பி. மற்றும் அமானாவைச் சேர்ந்த தலைவர்களைக் கொண்ட பி.எச். கல்வி, சுகாதாரம், சட்டம், பொருளாதாரம், பாதுகாப்பு, பாலினம், இளைஞர்கள், வாழ்க்கைச் செலவு மற்றும் சட்டம் ஆகியத் துறைகளை உள்ளடக்கிய ஒன்பது குழுக்களை அமைத்தது.

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இன்று, மலேசியர்கள் வாக்குப் பெட்டியின் மூலம் அரசாங்கத்தை ஜனநாயக ரீதியாக மாற்றி, ஒரு வரலாறு உருவாக்கப்பட்டதை உலகம் கண்டது. பயமும் சந்தேகமும் மறக்க முடியாத மகிழ்ச்சியாக மாறின.

இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கோவிட் -19 தொற்றுநோயின் முதல் அலையின் போது, ​​துரோகிகளும் சந்தர்ப்பவாதிகளும் ஒன்றுபட்டு நாசவேலை மற்றும் துரோகச் செயல்களின் மூலம் ஒரு ‘பின் கதவு அரசாங்கத்தை’ நிறுவினர்.

“அந்த அரசாங்கத்தால் இனி நாட்டை வழிநடத்த முடியாது என்பதை இன்று நாம் காண்கிறோம். அரசியல் ரீதியாக, இந்த அரசாங்கம் நிலையற்ற சிறுபான்மை அரசாங்கமாகவே உள்ளது,” என்று பி.கே.ஆர். தலைமைச் செயலாளர் சைஃபுட்டின் நாசுதியோன், டிஏபி அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் மற்றும் அமானா தலைமைச் செயலாளர் டாக்டர் ஹட்டா ராம்லி ஆகியோர் இன்று வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் கூறியுள்ளனர்.

கல்வி குழுவுக்கு, முன்னாள் கல்வியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்லீ மாலிக் (சுயேட்சை) தலைமை தாங்குவார், மேலும் நிக் நஸ்மி நிக் அஹ்மத், தியோ நீ சிங் மற்றும் ஹசான் பஹாரோம் ஆகியோரும் அக்குழுவில் செயல்படுவர்.

சுகாதாரக் குழுவிற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் சுல்கெஃப்ளி அஹ்மத் தலைமை தாங்குகிறார், அவருடன் டாக்டர் லீ பூன் சாய், டாக்டர் கெல்வினனி, ஹட்டா ராம்லி, சிம் ஸி ட்சின் மற்றும் ஓங் கியான் மிங் ஆகியோர் செயற்படுவர்.

அவ்விரண்டு குழுக்கள் தவிர்த்து, மற்றக் குழுக்களின் தலைவர்கள் அக்கூட்டணியின் முதல் கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படுவார்கள்.

அக்குழுவில், வல்லுநர்கள் அல்லது பொருத்தமானதாகக் கருதப்படும் எந்தவொரு தரப்பினரும் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரக் குழுவில் டாக்டர் சுல்கெஃப்ளி, வோங் சென் (பி.கே.ஆர்-சுபாங்) மற்றும் டோனி புவா (டிஏபி-டாமான்சாரா) ஆகியோர் உள்ளனர்.

பாதுகாப்புக் குழுவில் அமானா தலைவர் மொஹமட் சாபு, செனட்டர் லீயு சின் தோங் மற்றும் பி.கே.ஆர். ஜொஹாரி அப்துல் ஆகியோர் கலந்துகொள்வர்.

பாலினக் குழுவில், பி.கே.ஆரைச் சேர்ந்த புஸியா சல்லே, டிஏபியைச் சேர்ந்த சோங் எங் மற்றும் செனட்டர் அய்மான் அதிரா ஆகியோர் பங்கு பெறுவர்.

இளைஞர் குழுவில் அக்மால் நசீர், ஹோவர்ட் லீ மற்றும் ஷ்ஸானி முனீர் ஆகிய மூன்று கட்சிகளின் இளைஞர் பிரிவு தலைவர்கள் உள்ளனர்.

அதே நேரத்தில் வாழ்க்கை செலவினக் குழுவில் ஹசான் கரீம் (பி.கே.ஆர்.), ஹசனுடின் மொஹட் யூனுஸ் (அமானா) மற்றும் சோங் சியாங் ஜென் (டிஏபி) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சட்டக் குழுவில் ஹனிபா மைடின், வில்லியம் லியோங் மற்றும் ராம்கர்பால் சிங் ஆகியோர் உள்ளனர், அணிதிரட்டல் குழுவில் மொஹமட் சாபு, சம்சுல் இஸ்கண்டார் அகின் மற்றும் ஸ்டீவன் சிம் ஆகியோர் உள்ளனர்.

“நாட்டின் பொருளாதாரம் கடன்களால் தொடர்ந்து மோசமான நிலையை நோக்கி பயணிக்கிறது, வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாம் இழந்து வருகிறோம், வேலையின்மை புள்ளிவிவரங்கள் அதிகரித்துவருகின்றன.

“பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரையில், கோவிட் -19 தொற்றுநோயை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தவறியுள்ளது குறிப்பிடத்தக்கது, தடுப்பூசி திட்டத்தின் மந்தநிலை மற்றும் பி.கே.பி. உத்தரவுகளின் குறுக்கீடுகள் ஆகியவற்றில் இதை நாம் காணலாம்.

“மே 9, 2018 அன்று கிடைத்த வெற்றி, தொற்றுநோய் குறையும் போது, ஜிஇ15 உட்பட எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ள தயாராக இருக்க பி.எச்.க்கு வலிமையளிக்கும் என நம்புவோம்,” என்று அவர்கள் கூறினர்.