நேற்று, டைவிங் சாம்பியனும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பண்டேலெலா ரினோங், பள்ளிகள் மாணவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனும் 17 வயது மாணவி அயின் ஹுஸ்னிசா சைஃபுல் நிஜாமின் கருத்தை ஆதரித்ததோடு, இந்த விஷயத்தில் தொடர்ந்து குரல் கொடுக்குமாறு அந்த 5-ஆம் படிவ மாணவிக்கு ஊக்கமளித்தார்.
இந்தச் சம்பவம், தான் #makesportasaferplace (விளையாட்டு இடங்களை அனைவருக்கும் பாதுகாப்பாக வையுங்கள்) முயற்சித்தபோது ‘டிவா’ என்று அழைக்கப்பட்டதைப் போன்றது என்று அவர் கூறினார்.
கேள்வி என்னவென்றால், கல்வியமைச்சர் ராட்ஸி ஜிடின் பள்ளிகள் மாணவர்களுக்குப் பாதுகாப்பான இடங்கள் என்பதை உறுதிப்படுத்தி காட்டத் தவறியதோடு, மாதவிடாய் சுழற்சி சோதனைகள் மற்றும் ஆசிரியர்களிடையே ஆபாச நகைச்சுவைகள் போன்ற பிரச்சினைகள் மூன்று வாரங்கள் வரை நீடிக்கவிட்டது ஏன்?
இந்த இரண்டு சிக்கல்களையும் மலேசியாகினி ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் முதன்முதலில் தெரிவித்தது, ஓர் உணர்திறன் மற்றும் திறமையான அமைச்சர், தொடக்கத்திலேயே இப்பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதில் தனது தலைமைத்துவத்தைக் காட்டியிருக்க வேண்டும், ஆனால் அவர் உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முயற்சிக்கிறார்.
இரண்டு சிக்கல்களிலும் ராட்ஸி பரிதாபமாக தோல்வியடைந்துள்ளார்.
மாதவிடாய் சுழற்சி சோதனை எந்தப் பள்ளியில் நடந்தது என்று அவர் கேட்டார், உடனே இந்த அதிர்ச்சியூட்டும் செயலைச் செய்த 15 பள்ளிகளின் பெயர் பட்டியல் வழங்கப்பட்டது.
நான்கு நாட்களுக்கு முன்னர், பாலினச் சமத்துவக் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜெ.எ.ஜி.) மாதவிடாய் சுழற்சி சோதனை மற்றும் பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விசாரணையில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சுக்கு அழைப்பு விடுத்தது.
இந்த விசாரணையில் கல்வியமைச்சுக்கு உதவ தயாராக இருப்பதாக கூறியதுடன், பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு கல்வியமைச்சுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பியதாக ஜெ.எ.ஜி. கூறியது.
மரியாதை பண்புகளை ஊக்குவிக்கும் மற்றும் வன்முறையை நிராகரிக்கும் பாதுகாப்பான கற்றல் சூழலில், அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கான பொறுப்பு அமைச்சுக்கு உள்ளது என்று அக்குழு கூறியது.
அயின் ஹுஸ்னிசாவின் குற்றச்சாட்டுகளுக்காக, அவருக்கு எதிராக அவரது முகநூலில் அருவருப்பான கருத்துகள் அதிகரித்துள்ளன, அயின் ஒரு “பிசாசின் மகள்” என்று அவரது பள்ளி முதல்வரே வர்ணித்துள்ளார்.
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில், ஒரு கல்வி அமைச்சராக தனது தலைமைத்துவத்தைக் காட்ட ராட்ஸி தயாராக இல்லை என்றால், அவர் அப்பதவியை இராஜினாமா செய்யலாம்.
____________________________________________________________________________________
லிம் கிட் சியாங், இஸ்கண்டார் புத்திரி நாடாளுமன்ற உறுப்பினர்