ஏப்ரல் 30-ம் தேதி, புக்கிட் அமானில், தேசியக் காவல்துறைத் தலைவராக (ஐ.ஜி.பி) தனது கடைசி செய்தியாளர் சந்திப்பில் அப்துல் ஹமீட் படோர் வெளியிட்டக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், மலேசியாகினி ஊடகவியலாளர்களிடம் போலிசார் ஓர் அறிக்கையைப் பதிவு செய்தனர்.
மலேசியாகினி மலாய் செய்திப் பிரிவு ஆசிரியர் ஜிமாடி ஷா ஒத்மான், காலை மணி 11.30 தொடங்கி சுமார் மூன்று மணி நேரம் சாட்சியமளித்தார், கினிடிவி ஒளிபரப்பு செய்தியாளர் விவியன் யாப்-இடம், சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது.
பூச்சோங், புத்ரா பெர்டானா காவல் நிலையத்தில், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு நடவடிக்கை பிரிவு (டி8)-ஐச் சேர்ந்த ஏஎஸ்பி ஸஹரின் அப்துல் இரஹ்மான் மற்றும் எஸ்எம்டி சுல்சாரிஸ்வான் சுல்கெஃப்லி ஆகியோர் இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
ஹமீட்’டின் பத்திரிகையாளர் சந்திப்பின் உள்ளடக்கம், அச்சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மற்றும் மலேசியாகினி மற்றும் கினிடிவி ஒளிபரப்பிய செய்திகள் மற்றும் வீடியோக்களின் விவரங்கள் குறித்தும் ஜிமாடி மற்றும் யாப் இருவரிடமும் விளக்கம் பெறப்பட்டது.
பத்திரிகையாளர் சந்திப்பில் ஹமீட், போலிஸ் படையில் அரசியல் தலையீடு, அரசியலில் ஊழல் பிரச்சினை போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பியதோடு உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீனை அவதூறாகப் பேசியுள்ளார்.
விசாரணை எந்தப் பிரிவின் கீழ் உள்ளது என்பது மலேசியாகினிக்குத் தெரிவிக்கப்படவில்லை.
நாடு முழுவதும் ஆறு போலிஸ் புகார்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மே 6-ம் தேதி, புதியத் தேசியக் காவல்துறைத் தலைவரான, அக்ரில் சானி அப்துல்லா சானி, ஹமீட்டின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை அறிக்கைகள் (உள்விசாரணை) திறக்கப்படும் என்றார்.
ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், எந்தப் பிரிவின் கீழ் விசாரணையைத் தொடர வேண்டும் என்று சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் ஆலோசனையைப் பெறுவோம் என்று அக்ரில் சானி கூறினார்.
“வழக்கமாக, அதிகார அத்துமீறல் அல்லது ஊழல் குற்றங்களுக்காக, இது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணையை உள்ளடக்கும்.
“இருப்பினும், நாங்கள் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து விசாரிப்போம்,” என்று அவர் கூறியதாக உத்துசான் மலேசியா மேற்கோளிட்டுள்ளது.
விசாரணை இன்னும் அசல் கட்டத்தில் உள்ளது என மலேசியாகினிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்சியமளிக்க ஹமீட் மற்றும் ஹம்சா அழைக்கப்படுவார்களா என்பதைப் போலீசார் தெரிவிக்கவில்லை.