சுபாங் விமான நிலைய விற்பனை திட்டத்தை மறுஆய்வு செய்க – எம்.ஏ.எச்.பி.

சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்தை (எல்.டி.எஸ்.ஏ.ஏ.எஸ்), தனியார் துறைக்கு விற்பனை செய்வதற்கான அனைத்து திட்டங்களையும் மறுஆய்வு செய்யுமாறு மலேசியன் ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்.ஏ.எச்.பி.) கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், மலேசியா முழுவதும் 39 விமான நிலையங்களையும், துருக்கியின் இஸ்தான்புல்லில் ஒரு சர்வதேச விமான நிலையத்தையும் இயக்குவதில் இந்நிறுவனம் ஒரு சிறந்த சாதனையைப் படைத்திருப்பதாக எம்.ஏ.எச்.பி. தலைவர் ஷம்ரி அப்துல் கடீர் தெரிவித்துள்ளார்.

உண்மையில், எம்.ஏ.எச்.பி. இயக்கிவரும் பல சர்வதேச விமான நிலையங்கள், சேவைகள் மற்றும் பயணிகள் எண்ணிக்கை வளர்ச்சி அடிப்படையில் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுவருகின்றன.

“பொதுவாக விமான நிலையங்கள் ஓர் அரசுக்குச் சொந்தமான நிலையான சொத்து ஆகும். தவிர, சுபாங் விமான நிலையம் ஒரு தேசிய வரலாற்று விமான நிலையமாகும், மேலும் அது மலேசியர்களுக்கு மிகவும் நெருக்கமானது.

“எனவே, அதைத் தனியார் துறை இயக்க அனுமதிப்பதற்கு முன்னதாக, பாதுகாப்பு மற்றும் சொத்து உரிமைகள் ஆகியவைக் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நாட்டிற்கு, குறிப்பாக வான்வெளித் தொழிலில், ஒரு பெரிய விமானத் தொழில்துறையின் வளர்ச்சியைத் தூண்டுவதில் எல்.டி.எஸ்.ஏ.ஏ.எஸ். வெற்றி பெற்றுள்ளது என்றும் ஷம்ரி கூறினார்.

எனவே, ‘சுபாங் விமான நிலைய மீளுருவாக்கப் பெருந்திட்ட’ கட்டமைப்பின் கீழ், அந்த விமான நிலையத்தின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் எம்.ஏ.எச்.பி. சிறப்பு கவனம் செலுத்துகிறது என்று அவர் விளக்கினார்.

எம்.ஏ.எச்.பி.-இன் முக்கியப் பங்குதாரர்களான, அரசாங்கத்தால் இயங்கும் நிதி நிறுவனங்கள் – கஸானா நேஷனல் பெர்ஹாட், தொழிலாளர் சேமநிதி வாரியம் (ஈ.பி.எஃப்) மற்றும் ஓய்வூதிய நிதி (கே.டபிள்யு.எஸ்.பி) – 2020-ஆம் ஆண்டின் இறுதியில், மொத்தம் 53 விழுக்காடு பங்குகளைக் கொண்டுள்ளன.