இன்று பிற்பகலில், கோவிட் -19 தொற்று அதிகம் பரவும் ஆபத்து இருப்பதாகக் குறிக்கப்பட்ட வளாகங்களுக்கான செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) அரசாங்கம் மீண்டும் பரிசீலிக்கும் என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
தொற்று பரவும் இடங்களை அடையாளம் காட்டும் முறைமை (எச்.ஐ.டி.இ.) குறித்து, அதிகாரிகள் வழங்கிய முரண்பாடான அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களால் இந்த விவாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஆரம்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்.ஐ.டி.இ. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்று, ஓர் இயங்கலை செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த கைரி, இன்று பிற்பகல் கூட்டத்திற்குப் பிறகு அரசாங்கம் அறிக்கை வெளியிடும் என்று கூறினார்.
“எச்.ஐ.டி.இ. பட்டியலில் உள்ள வளாகங்கள் மூடப்படுவது குறித்து, இன்று பிற்பகல் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்) கூட்டம் முடியும் வரை நான் கருத்து தெரிவிக்க முடியாது.
“இந்த விஷயத்தை இன்று பிற்பகல் எம்.கே.என். கூட்டத்தில் விவாதிப்போம் என்று நினைக்கிறேன்.
“பின்னர், எச்.ஐ.டி.இ. பட்டியலில் உள்ள வளாகங்களுக்குத் தேவைப்படும் எஸ்.ஓ.பி.க்களை நாங்கள் ஓர் அறிக்கையை வெளியிடுவோம்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, கைரியின் கருத்துப்படி, சுகாதார அதிகாரிகளின் ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையிலேயே, எச்.ஐ.டி.இ.-இல் பட்டியலிடப்பட்டுள்ள வளாகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றிருந்தது.
இருப்பினும், அறிவிப்பு வெளியான சில நாட்களுக்குப் பிறகு, எச்.ஐ.டி.இ.-இல் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வளாகங்களும் மூன்று நாட்களுக்கு மூடப்பட வேண்டும் என்று எம்.கே.என். அறிவித்தது.
கடந்த சனிக்கிழமையன்று அதிகத் தொற்று பரவல் இடங்களாக மாறும் அபாயமுள்ள பகுதிகளாக குறிக்கப்பட்ட 156 வளாகங்களின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, எப்போது அவை மூடப்பட வேண்டும் என்பதில் முரண்பட்ட அறிவுறுத்தல்களும் இருந்தன, ஓர் அறிக்கை அது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும், மற்றொரு அறிக்கை இன்று (மே 10) முதல் அது தொடங்கும் என்றும் கூறின.