நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நாடு முழுவதும் நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார்.
கோவிட் -19 மேலாண்மை தொடர்பான தேசியப் பாதுகாப்பு மன்றச் சிறப்பு அமர்வில் இது முடிவு செய்யப்பட்டது. தினசரி கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்துவரும் போக்கைத் தொடர்ந்து, நாடு மூன்றாவது தொற்றுநோய் அலையை எதிர்கொண்டுள்ளது.
“இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாடு மூலம், மக்களை வீட்டில் உட்கார ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே, கோவிட் -19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க முடியும்.
“நான் இன்று தலைமை தாங்கியக் கோவிட் -19 மேலாண்மை தொடர்பான தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு அமர்வு, நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பி.கே.பி. இந்த முறை மே 12 முதல் ஜூன் 7, 2021 வரை நடைமுறையில் இருக்கும்.
பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மே 8-ம் தேதி அறிவித்த தடைகள் – மாநில, மாவட்ட எல்லைகளைக் கடக்க தடை, சமூக நடவடிக்கைகள், விளையாட்டு மற்றும் கல்வி மீதான தடை – இதில் அடங்கவில்லை, இது மே 10 முதல் ஜூன் 6, 2021 வரை நடைமுறையில் இருக்கும்.
இருப்பினும், அனைத்து பொருளாதாரத் துறைகளும் பி.கே.பி. காலத்தில் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
இந்த அறிவிப்பின் அடிப்படையில், ஒரு வாகனத்தில் மூவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள், தனியார் வாகனங்களான டாக்சிகள் மற்றும் இ-ஹெயிலிங் வாகனங்களில் ஓட்டுநர் உள்ளிட்டு மூவர் மட்டுமே பயணிக்க முடியும்.
பொருட்களை ஏற்றிச் செல்லும் பொருளாதார / தொழில்துறை சார்ந்த வாகனங்களின் பயணிகள் எண்ணிக்கை, வணிக வாகனப் பதிவு உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைப் பொறுத்தது.
பொது போக்குவரத்தில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சமூக இடைவெளி மற்றும் அமைக்கப்பட்ட எஸ்.ஓ.பி.க்களுக்கு இணங்க இருக்க வேண்டும்.
உணவு விற்பனை டிரைவ்-துரு மற்றும் உணவுப் பொட்டலம் வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, உணவகங்களில் சாப்பிடுவது அனுமதிக்கப்படாது.
ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனைத்து முதலாளிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது, எல்லா நேரங்களிலும் 30 விழுக்காட்டிற்கும் அதிகமான நிர்வாக ஊழியர்கள் இல்லாத நிலையில் வேலைகள் நடைபெறுவதை முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும்.
இன்னும் மூன்று நாட்களில் கொண்டாடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நோன்புப் பெருநாளின் போது, வீடுகளில் உபசரிப்பு மற்றும் கல்லறைகளுக்குச் செல்லுதல் அனுமதிக்கப்படாது.
நோன்புப் பெருநாள் பிரார்த்தனைகள், மசூதிகள் மற்றும் சூராவ்-களின் கொள்திறனுக்கு உட்பட்டு வழிபாட்டாளர்களை அனுமதிக்கலாம்.
அதுமட்டுமின்றி, முஸ்லீம் அல்லாதவர் வழிபாட்டுத் தளங்களின் செயல்பாடும் இறுக்கமாக்கப்படும்.
“சபா, சரவாக் மற்றும் லாபுவானில் செயல்படுத்தப்பட்டு வரும் குறிப்பிட்ட நடவடிக்கைகள் தொடரும்,” என்று முஹைதீன் கூறினார்.
மேலும், நேற்று இஸ்மாயில் அறிவித்தபடி, அவசரநிலை, சுகாதாரம், வேலை, பொருளாதார நோக்கங்கள், தடுப்பூசி நியமனங்கள் மற்றும் நீண்டகாலம் துணைவரைச் சந்திக்காதவர்கள் தவிர, மாநில மாவட்ட எல்லைகளைக் கடக்கும் பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.
நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் உடற்பயிற்சி போன்ற திறந்த பகுதிகளில் தனிப்பட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தவிர, அனைத்து சமூகக் கூட்டங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
சர்வதேசத் தேர்வுகளுக்கு அமரும் மாணவர்களைத் தவிர, அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
“இந்தப் பி.கே.பி.-யில் உள்ள அனைத்து தடைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கான விரிவான எஸ்ஓபி-க்களை எம்.கே.என். அறிவிக்கும்,” என்று அவர் கூறினார்.
பி.கே.பி.யை அமல்படுத்துவது குறித்து கூறுகையில், தினசரி 4,000 நேர்வுகள் மற்றும் 37,396 செயலில் உள்ள நேர்வுகள் 1,700 இறப்புகளுடன் (மே 10), மலேசியா கோவிட் -19 தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்கிறது, இது ஒரு தேசிய நெருக்கடியைத் தூண்டக்கூடும் என்றார் முஹைதீன்.
அதிகத் தொற்று வீதங்களுடன், புதிய மாறுபாடுகளும் (வேரியண்ட்) இருப்பதால், பொது சுகாதார அமைப்பின் திறன்களுக்கானத் தடைகள் அதிகரிப்பதுடன், சில சமூகங்களிடையே எஸ்ஓபி-க்களின் மோசமான இணக்கம் இருப்பதாலும் அரசாங்கம் இந்தக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளது.
“சமூக இடைவெளியைச் சிக்கல் மற்றும் நெரிசலான இடங்களில் மக்கள் இருப்பதே கோவிட் -19 பரிமாற்றத்திற்கான முக்கியக் காரணங்கள் என்று தரவுகளும் அறிவியல்
சேகரிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து காட்டுகின்றன,” என்று அவர் கூறினார்.
எனவே, நாடு மேலும் கடுமையான சுகாதாரப் பேரழிவில் சிக்காமல் தடுக்க, நாடு முழுவதும் பி.கே.பி. செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.