பி.கே.பி. 3.0 : முஹைதீன் வெற்றி பெறுவார் என்று எப்படி நம்புவது – நஜிப்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற பிரதமர் முஹைதீன் யாசின் அறிவிப்பை நஜிப் ரசாக் விமர்சித்தார்.

முகநூலில், தொடர்ச்சியான இடுகைகளில், முன்னாள் பிரதமர் கோவிட் -19 தொற்றுநோய் சங்கிலியை உடைக்க பி.கே.பி. 2.0 மற்றும் பி.கே.பி. 3.0 ஆகியவற்றின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பினார்.

“இந்தக் கோவிட் -19 அலையின் 60 விழுக்காடு திரளைகள் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானத் தளங்களிலிருந்து வந்தவை.

ஆனால், தொழிற்சாலைகளும் கட்டுமானத் தளங்களும் பி.கே.பி. 2.0 மற்றும் பி.கே.பி. 3.0 காலகட்டங்களில் செயல்பட அனுமதிக்கப்பட்டன.

“எனவே, கோவிட் -19 சங்கிலியைப் பி.கே.பி. 2.0 மற்றும் பி.கே.பி. 3.0 எவ்வாறு ஒழிக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நஜிப்பின் கூற்றுப்படி, முஹைதீனும் அவரது அமைச்சரவை அமைச்சர்களும் காரணங்களைத் தெரிவிப்பார்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானத் தளங்களைத் தொடர்ந்து திறக்க அனுமதித்தால்தான், மக்களுக்கு “உணவளிக்க” முடியுமெனக் கண்டுபிடித்து கூறுவார்கள்.

“நான் உண்மைகளைப் பகிர்ந்து கொள்கிறேன். ஜனவரி 11: அவசரநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து, பெரிய நிறுவனங்களுக்குச் சொந்தமான அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானத் தளங்கள் எதுவும் ஒரு நாள் கூட மூடப்படவில்லை. ஆனால், சிறிய கடைகள் இரண்டு மாதங்களுக்கு மூடப்பட்டன (ஜனவரி 11 முதல் மார்ச் 4 வரை).

“ஜனவரி 11 முதல் இன்றுவரையில் மாநில எல்லைக் கடக்கும் பயணங்களுக்குத் தடை விதித்ததன் காரணமாக, மில்லியன் கணக்கான மக்களை உள்ளடக்கியச் சுற்றுலாத் துறை மூடப்பட்டது அல்லது கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

“ஜனவரி 11 முதல் மார்ச் 4 வரை மூடப்பட்ட கல்வித் துறை, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மே மாதத்தில் மீண்டும் மூடப்பட்டது, இதனால் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் போன்ற தொடர்புடைய துறைகள் பாதிக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

ஜனவரி 11 முதல் மூடப்பட்டிருக்கும் பொழுதுபோக்குத் துறைகளுக்கும், ஐந்து மாதங்களாக எந்த வருமானமும் இல்லை.

இன்னும் சில துறைகள் தற்காலிகமாக திறக்கவும், தற்காலிகமாக மூடவும் உத்தரவிடப்படுகின்றன, மேலும் கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் பல வாடிக்கையாளர்கள் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் அத்துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

“வெளிநாட்டு, பெரு நிறுவன உரிமையாளர்கள் மட்டும் அவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட்ட வேளையில், உள்ளூரைச் சேர்ந்த மில்லியன் கணக்கான சாதாரண மக்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் சாப்பிடத் தேவையில்லையா?” என்று அவர் கேட்டார்.

நேற்றைய அறிவிப்பில், இந்த முறை மே 12 முதல் ஜூன் 7 வரை பி.கே.பி. நடைமுறையில் இருக்கும் என முஹைதீன் தெரிவித்தார்.

மே 8-ம் தேதி, பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்த தடையும் – மாவட்ட மற்றும் மாநில எல்லைகளைக் கடக்கத் தடை, சமூக நடவடிக்கைகள், விளையாட்டு மற்றும் கல்வி மீதான தடை – இதில் இல்லை, அது மே 10 முதல் ஜூன் 6 வரை நடைமுறையில் இருக்கும்.

டாக்சிகள் மற்றும் இ-ஹெயிலிங் உள்ளிட்ட தனியார் வாகனங்களில், ஓட்டுநர்கள் உட்பட மூவர் மட்டுமே ஒரு வாகனத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் முஹைதீன் கூறினார்.

இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்த நஜிப், இந்த உத்தரவைக் கேலி செய்தார்.

“பி.கே.பி. 1.0 : காரில் ஒருவர் மட்டுமே, பி.கே.பி. 2.0 : காரில் இருவர் மட்டுமே.

“பி.கே.பி. 3.0 : காரில் மூவர் மட்டுமே, பி.கே.பி. 4.0 -? பி.கே.பி. 14.0 -?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.