லிம் : ‘தோல்வியுற்ற’ அரசியல்வாதிகள்தான் இராஜினாமா செய்ய வேண்டும், அரசு ஊழியர்கள் அல்ல

‘தோல்வியுற்ற’ அரசியல்வாதிகள்தான் அரசு நிர்வாகப் பதவிகளில் இருந்து விலக வேண்டும், அரசாங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அல்ல.

அவர்கள் ஆதரித்த கட்சி தற்போதைய அரசாங்கத்தில் இல்லாதது வசதிபடவில்லை என்றால், அரசு ஊழியர்கள் தங்கள் வேலையை இராஜினாமா செய்யலாம் என்ற பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் கருந்திற்கு, இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் இவ்வாறு பதிலளித்தார்.

“ஹாடியுடன் நான் உடன்படவில்லை, ஏனென்றால் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிய அரசியல் தலைவர்கள்தான், உதாரணமாக, முஹைதீனின் அமைச்சரவைதான் இராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

“நாட்டின் பொதுத் துறை சேவைகள் காக்கிஸ்டோக்ராசி (மிக மோசமான, மற்றும் / அல்லது மிகவும் பொறுப்பற்ற குடிமக்களால் நடத்தப்படும் அரசாங்க அமைப்பு) பள்ளத்தாக்கில் விழுவதைக் காண விரும்பாத அரசு ஊழியர்களை நான் குறை கூற விரும்பவில்லை,” என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அரசாங்கத்தை உருவாக்கியக் கட்சிகளை ஆதரிக்கவில்லை என்றாலும், ஆளும் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விரும்பம் தெரிவித்தார்.

“விதிகளின்படி, அரசு அதிகாரிகள் ஆளும் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும், அரசாங்கமாக இருக்கும் கட்சியை அவர்கள் ஆதரிக்காவிட்டாலும் கூட.

“… தார்மீக ரீதியாக, அவர்கள் இராஜினாமா செய்யலாம், அவர்கள் விரும்பியபடி ஒரு பதவியில் இருக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, இனி ஒரு முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இருக்காது என்று உறுதியளித்த ஒரு மாதத்திற்குள், நேற்று, பிரதமர் முஹைதீன் யாசின் நாடு தழுவிய நிலையில் பி.கே.பி. 3.0-ஐ அறிவித்ததில் இருந்து, தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் தோல்வியை நாம் காணலாம் என்று லிம் இன்று கூறினார்.

“நேற்று, பிரதமரின் பி.கே.பி. அமலாக்க அறிவிப்பு நேரடியாக ஒளிபரப்பப்படவில்லை.

“அரசாங்கத்தால் எடுக்கப்படும் எந்தவொரு முடிவுகளிலும் அறிவிப்புகளிலும், குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோயுடன் தொடர்புடையவை மீது, மக்கள் இப்போது நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்பது நிச்சயமாக முஹைதீனுக்குத் தெரியும்.

“கோவிட் -19 தொற்றை அரசாங்கம் கையாண்ட விதம் – இரண்டு நாட்கள் தொடர்ந்த பல குழப்பங்களுக்குப் பிறகு, பி.கே.பி. 3.0-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான முடிவை அரசாங்கம் அறிவித்தது. ஒவ்வொரு அமைச்சும் பி.கே.பி. 3.0 மற்றும் நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. ஆகியவற்றின் பொருள் குறித்து ஒருவருக்கொருவர் தவறான மற்றும் முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டன. மக்களுக்கு, குறிப்பாக சிறு வணிகர்களுக்கு இது கஷ்டத்தை ஏற்படுத்தியது,” என்று அவர் கூறினார்.

இந்தப் பிராந்தியத்தில், கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போரில், மோசமான செயல்திறன் கொண்ட நாடுகளில் மலேசியாவும் உள்ளது என்றும், மலேசியா “மினி இந்தியா”-ஆக மாறலாம் என்றும் லிம் எச்சரித்தார்.

இந்தியாவில் தற்போது புதியக் கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகி வருகின்றது.

நேற்று, இந்தியா 366,000-க்கும் மேற்பட்ட புதியக் கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்தது, இது பிரேசிலின் புதிய நேர்வுகளில் 10 மடங்கிற்கும் மேலானது, பிரேசில் 34,162 புதிய நேர்வுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

“மலேசியாவில் மோசமடைந்து வரும் கோவிட் -19 நெருக்கடிக்கு, முஹைதினும் அவரது அமைச்சரவையும் பொறுப்பேற்பார்களா?” என்றும் லிம் கேள்வி எழுப்பினார்.