இப்ராஹிம் அலி : நஜிப்பிடமிருந்து காசோலை பெற்றது உண்மை

மூத்த அரசியல்வாதி இப்ராஹிம் அலி, நஜிப் ரசாக்கிடமிருந்து காசோலையைப் பெற்றதை ஒப்புக் கொண்டார், ஆனால் அது 1எம்டிபி அல்லது எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் பணத்துடன் சம்பந்தப்பட்டது என்று தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.

“நஜிப்பின் தனிப்பட்ட காசோலையை நான் பெற்றுள்ளேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன், காசோலையில் அவர் பெயர் இருந்தது, அது எஸ்.ஆர்.சி. அல்லது 1எம்.டி.பி. பணத்துடன் தொடர்புடையது என்பதை நான் உணரவில்லை, ஏனெனில் காசோலையில் எஸ்.ஆர்.சி. அல்லது 1எம்.டி.பி.யின் பெயர் இல்லை.

“நான் எப்போது அதைப் பெற்றேன் என்பது எனக்கு நினைவில் இல்லை, ஆனால் ஜிஇ13-க்குப் பிறகு, 1எம்.டி.பி. ஊழல் வெளிப்படுவதற்கு முன்பே.

“அது தெரியவந்திருந்தால், நான் நிச்சயமாக அதை ஏற்க விரும்ப மாட்டேன், மேலும் நஜிப் அவர்களே அக்கணக்கை மீண்டும் பயன்படுத்தி இருக்கமாட்டார்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, 1எம்.டி.பி. மற்றும் அதன் முன்னாள் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் சென். பெர். இரண்டும், அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டி, பல பிரமுகர்கள் மீது சிவில் வழக்கு தாக்கல் செய்தன.

மோசடி செய்யாத, ஆனால் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீதும் அவர்கள் வழக்குத் தொடுக்கின்றனர் – அறிந்தோ, அறியாமலோ.

பெயரிடப்பட்டவர்களில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் 1எம்.டி.பி. தலைவர் சே லோடின் வோக் கமருட்டின் மற்றும் 1எம்.டி.பி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஷாரோல் அஸ்ரல் இப்ராஹிம் ஹல்மி, மொஹமட் ஹஸீம் அப்துல் இரஹ்மான் மற்றும் அருள் காந்தா கந்தசாமி ஆகியோரும் அடங்குவர்.

ஜோ லோவின் குடும்பத்தைச் சேர்ந்த பலரும், அவரது தந்தை லேரி லோவ் ஹோக் பெங் மற்றும் அவரது சகோதரி லோவ் மேய் லின் உட்பட பெயரிடப்பட்டனர்.

எஸ்.ஆர்.சி.யின் துணை நிறுவனங்களான ஜி.எம்.எஸ்.பி. மற்றும் ஜே.பி.எஸ்.பி. ஆகியவற்றின் வழக்கில் இப்ராஹிம் பெயரிடப்பட்டுள்ளார், இதில் நஜிப் மற்றும் சிலாங்கூர் அம்னோ உட்பட எஸ்.ஆர்.சி. பணத்தைப் பெற்ற 14 தரப்பினர் இருப்பதாகக் கூறப்படுகிறது.