படிவம் 5 மாணவி அயின் ஹுஸ்னிசா சைஃபுல் நிஸாம் வெளிப்படுத்தியபடி, வகுப்பில் பாலியல் வல்லுறவு குறித்து நகைச்சுவை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆண் ஆசிரியர், போலிசாரின் விசாரணை முடிவுகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், சிலாங்கூர், புஞ்சாக் ஆலாம் இடைநிலைப் பள்ளியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மலேசியக் கல்வி அமைச்சு, இன்று ஓர் அறிக்கையின் மூலம், சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியது.
“கல்வி அமைச்சின் அடுத்த நடவடிக்கை இந்த வழக்கு விசாரணையின் முடிவைப் பொறுத்தது,” என்று, கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அயின் செய்த போலிஸ் புகாரை குறிப்பிட்டது.
ஏப்ரல் 24 அன்று, அயின் ‘டிக் டோக்’கில் ஒரு வீடியோவைப் பதிவேற்றினார், அதில் ஓர் ஆண் ஆசிரியர் உடற்கல்வி மற்றும் சுகாதார வகுப்பில், மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றி விவாதித்து கொண்டிருந்தபோது, பாலியல் வல்லுறவு பற்றி கேலி பேசியதாகக் குற்றஞ்சாட்டி இருந்தார்.
வகுப்பில் உள்ள ஆண் மாணவர்களிடம், “நீங்கள் பாலியல் வல்லுறவு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், 18 வயதிற்குட்பட்டவர்களிடம் வேண்டாம், 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் செய்யலாம்,” என்று ஆசிரியர் சொன்னதாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கி, பலரின் ஆதரவைப் பெற்ற போதிலும், முகநூலில் அவரைப் “பிசாசின் மகள்” என்று பள்ளி முதல்வர் விமர்சித்தார்.
இதற்கிடையில், முகநூல் விண்ணப்பத்தின் மூலம் அயினுக்கு எதிராகப் பள்ளி முதல்வர் கூறியதாகக் கூறப்படும் கருத்துகளின் திரைக்காட்சிகளை (ஸ்கிரீன்ஷோட்ஸ்) விரிவாக ஆராய்ந்ததாகவும் கல்வியமைச்சு கூறியது.
“அக்கருத்துக்களைத் தான் பதிவேற்றவில்லை என்று மறுத்ததோடு; அவரது முகநூல் கணக்கில் ஊடுருவல் நிகழ்ந்துள்ளது என்று சந்தேகிப்பதாகவும் பள்ளி முதல்வர் கோல சிலாங்கூர் காவல் நிலையத்தில் போலிஸ் புகார் ஒன்றைச் செய்துள்ளதை கல்வியமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது,” என்று அது மேலும் கூறியது.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்தப் பிரச்சினைக்கு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பள்ளி தனக்குப் பாதுகாப்பற்றதாக உணர்ந்த அயின் பள்ளிக்குச் செல்லவில்லை.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, தனது தந்தை சைஃபுல் நிஸாம் அப்துல் வஹாப் பள்ளி முதல்வர், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர் சங்கத்தைச் (பிஐபிஜி) சந்தித்ததாகவும் அயின் கூறினார்.
மே 4-ஆம் தேதி, அயின் தொடர்ந்து பள்ளிக்கு வராவிட்டால் அவர் இடைநீக்கம் செய்யப்படுவார் என்று ஓர் எச்சரிக்கை கடிதம் வந்ததை அடுத்து இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த கல்வியமைச்சு, மாணவர் ஆளுமை அமைப்பு (எஸ்.எஸ்.டி.எம்.) மூலம் செயல்படும் பள்ளிகள், மாணவர்களின் வருகையை கண்காணிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதால் இந்த எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டதாக தெரிவித்தது.
ஒரு மாணவர் பள்ளிக்கு எழுத்துப்பூர்வமாக ஒரு காரணத்தைச் சமர்ப்பிக்காமல், தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அல்லது தொடர்ச்சியாக 10 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், இந்த முறை மூலம் ஆசிரியர் முதல் எச்சரிக்கை கடிதத்தை வழங்க முடியும்.
2021 ஏப்ரல் 16 முதல் 30 வரையிலான காலப்பகுதியில், காரணமின்றி பள்ளிக்கு வராத ஆறு மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலர்களுக்குப் பள்ளி எச்சரிக்கைக் கடிதங்களை வழங்கியுள்ளது.
“மாணவர்கள் மற்றும் அனைத்து பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அமைச்சு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது என்பதை கல்வியமைச்சு வலியுறுத்த விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.
பள்ளிகள் பாதுகாப்பான இடங்கள் என்பதை உறுதிப்படுத்த அயின் விடுத்த அழைப்பு, பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கல்வி முறையில் மாற்றங்களைக் கோருவது போன்ற விஷயங்களில் மக்களிடையே ஒரு விவாதத்தைத் தூண்டியது.