நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும் (பி.கே.பி) அவசரகாலப் பிரகடனமும் அதன் இலக்குகளை அடைவதை உறுதி செய்வதற்காக, மலேசிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் சங்கம் (பிபிஎம்எம்) அரசாங்கத்திற்கு எட்டு திட்டங்களை இன்று சமர்ப்பித்தது.
கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்க, அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் தனது தரப்பு ஆதரவளிப்பதாக அதன் தலைவர் ஸைனுல் ரிஜால் அபுபக்கர் தெரிவித்தார்.
“கோவிட் -19 நோய்தொற்று விகிதங்களுக்கு அதிக பங்களிக்கும் துறைகளை மூடுவது மற்றும் அந்தத் துறைகளில் பரவலைத் தடுப்பதற்கான செயலூக்க நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்.
“ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்து, நவீன மருத்துவத்துடன் மட்டுப்படுத்தப்படாமல், உள்ளூர் பாரம்பரிய மருத்துவத்தின் அம்சங்களையும் உள்ளடக்கிய மலாய் / முஸ்லீம், சீன மருத்துவம், ஆயுர்வேதம், மூலிகைகள் மற்றும் பிற வகை மருத்துவம் குறித்தும், குறிப்பாக தடுப்பூசி உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.
“வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான தானியங்கி தடையை அமல்படுத்துதல் அல்லது கடன் வாங்கியவரின் மாதாந்திரக் கொடுப்பனவுகளை எளிதாக்கும் நோக்கில், கடனின் ஒரு பகுதிக்கு வங்கிகளுக்கு நிதியளித்தல் அல்லது வாங்குதல் போன்றவையும் அதில் அடங்கும்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கோவிட் -19 பரவலைத் தடுக்க, இன்று முதல் ஜூன் 7 வரை, மலேசியா பி.கே.பி. 3.0 ஐ செயல்படுத்தியுள்ளது.
நாடு ஒரு நாளைக்கு 4,000-க்கும் அதிகமான தொற்று வீதத்தைப் பதிவுசெய்து, இப்போது தொற்றுநோயின் மூன்றாம் அலைகளில் உள்ளது.
மே 10 அன்று, பிரதமர் முஹைதீன் யாசின், பி.கே.பி 3.0 அமலாக்க உத்தரவை அறிவித்தார். இருப்பினும், பொருளாதாரத் துறைகள் வழக்கம் போல் செயல்பட இன்னும் அனுமதிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பிபிஎம்எம் அதன் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்களிடமிருந்து பல புகார்களையும் அறிக்கைகளையும் பெற்றது, பி.கே.பி.யின் தாக்கம் குறித்து சராசரியாக தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான திறன் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தப் பி.கே.பி.யின் விளைவுகளை, அதிகரித்து வரும் விவாகரத்து எண்ணிக்கை, குற்ற செயல்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சினைகளின் புள்ளிவிவரங்களில் காணலாம்.
இந்த ஆண்டு வருமான வரியை அரசாங்கம் விலக்க அல்லது குறைக்க வேண்டும் என்றும் பிபிஎம்எம் பரிந்துரைத்தது.
“உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்.), சொக்ஸோ, தொழிலாளர் சேமநிதி வாரியம் (ஈபிஎஃப்) போன்ற அரசாங்க நிறுவனங்கள், கோவிட் 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நிலுவைத் தொகைகளையும் இடைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
“பி40 குழுவிற்கு வழக்கமான மற்றும் பயனுள்ள அடிப்படையில் நிதி உதவிகள் வழங்குவதோடு, எஸ்.எஸ்.எம்.-இல் பதிவு பெறாத சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், சாலையோர வர்த்தகர்களுக்கும் ஒரு வழக்கமான அடிப்படையில் உதவிகளை வழங்க வேண்டும்,” என்றார் அவர்.