தடுக்கப்படாவிட்டால் நேர்வுகள் 10,000-ஐ எட்டக்கூடும் – பிரதமர்

நாட்டில், பெருந்தொற்றின் வீதத்தை அதிகரிக்கும் பல புதிய வகைகள் (வேரியண்ட்) தோன்றியுள்ளதைத் தொடர்ந்து, மலேசியா சவால் மிக்க கோவிட் -19 மூன்றாவது அலைகளை எதிர்கொள்கிறது.

கடந்த சில வாரங்களாக கோவிட் -19 நேர்மறை நேர்வுகள் ஒரு நாளைக்கு 4,000-க்கும் அதிகமான எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார்.

 மேலும் கவலைக்குரிய வகையில், இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் காணப்படும் கொடிய வகை கோவிட் -19 தொற்றின் புதிய வகைகள் மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளன.

புதிய மாறுபாட்டின் பரவலைத் தடுக்காவிட்டால், அடுத்த சில வாரங்களில் தினசரி கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை ஐந்து இலக்கத்தை (> 10,000) எட்டும் என்று பிரதமர் எதிர்பார்க்கிறார்.

“அந்த நேரத்தில், தற்போது ஆபத்தான நிலையில் இருக்கும் நம் நாட்டின் முழு சுகாதார அமைப்பும் முடங்கிவிடும், மற்ற நாடுகளைப் போலவே, நோயாளிகள் தெருக்களில் இறந்து கிடக்கின்றனர், காரணம் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப் போதிய இடம் இல்லை,” என்று அவர் நேற்றிரவு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நோன்புப் பெருநாள் சிறப்புச் செய்தியில் கூறினார்.

நாட்டில் முஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவார்கள்.

தீவிரச் சிகிச்சை பிரிவு (ஐ.சி.யூ.) படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில், தற்போது நாட்டின் மருத்துவமனைகள் அதிகபட்ச திறனை நெருங்கி வருவதால், படுக்கைகள், ஆக்ஸிஜன் வழங்கல் மற்றும் சுவாசக் கருவிகளின் எண்ணிக்கையை அரசாங்கம் அதிகரிக்க முடியும் என்று முஹைதீன் கூறினார்.

இருப்பினும், நேர்மறையான நேர்வுகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தால், படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் நோயாளிகளின் எண்ணிக்கைக்குப் போதியதாக இருக்காது என்றார் அவர்.

முன்னர் பச்சை மண்டலங்கள் என வகைப்படுத்தப்பட்ட பகுதிகள், தற்போது மஞ்சள் நிறமாகவும் பின்னர் சிவப்பு நிறமாகவும் மாறி வருவதாக முஹைதீன் கூறினார்.

“மக்களிடையே கிருமி பரவலைத் தடுக்க அரசாங்கம் ஆரம்பத்தில் இலக்கு வைத்து நடவடிக்கை எடுத்தது. பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் பி.கே.பி.யைச் செயல்படுத்தினோம். இறுக்கமாக்கப்பட்ட பி.கே.பி. சில பகுதிகளில் செயல்படுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், சில வாரங்களுக்குள், தொற்று வேகமாக பரவி நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளும் சிவப்பு மண்டலமாக மாறியுள்ளதாகவும், கிட்டத்தட்ட 70 விழுக்காடு நோய்த்தொற்று நேர்வுகள் சமூகத்தில் அவ்வப்போது நிகழ்கின்றன என்றும் அவர் கூறினார்.

  • பெர்னாமா