சரவாக்கில் உள்ள நர்சரிகள், மழலையர் பள்ளிகள் திங்கள் முதல் செயல்படும்

சரவாக்கில் உள்ள அனைத்து நர்சரிகளும் மழலையர் பள்ளிகளும் அடுத்த திங்கட்கிழமை முதல் செயல்படலாம்.

குழந்தைகள் வளாகத்திற்கு வருவதற்கு முன்னும் பின்னும், அங்கு இருக்கும் நேரத்திலும் கடுமையான எஸ்.ஓ.பி.-க்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளோடு அவை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

சரவாக் நலன்புரி, சமூக நலன், மகளிர், குடும்பம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாத்திமா அப்துல்லா, மே 11-ஆம் தேதி வரையில், 282 முனைமுகப் பணியாளர்களின் 286 குழந்தைகள் மற்றும் சேவை துறையைச் சார்ந்த ஊழியர்களின் 1,022 குழந்தைகள் சம்பந்தப்பட்ட மொத்த 102 விண்ணப்பங்கள் தனியார் மழலையர் பள்ளிகளிடமிருந்து வந்துள்ளதாகச் சொன்னார்.

மாநில அரசின் கீழ் இயங்கும் மழலையர் பள்ளிகளான (ஐ.பி.ஏ.கே.கே.), 952 குழந்தைகள் சம்பந்தப்பட்ட 96 ஐ.பி.ஏ.கே.கே. செடிடிக் மற்றும் 3,702 குழந்தைகளைக் கொண்ட 1,087   ஐ.பி.ஏ.கே.கே. கெமாஸ் ஆகியவையும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

“இது தவிர, முனைமுகப் பணியாளர்களின் 155 குழந்தைகள் மற்றும் சேவை துறையைச் சார்ந்த ஊழியர்களின் 1,141 குழந்தைகள் பயிலும் 176 ஐ.பி.ஏ.கே.கே. பெர்பாடுவான்-உம் செயல்பட அனுமதிக்கப்படுகிறது,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பதிவு மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக, அனைத்து ஐ.பி.ஏ.கே.கே. நிறுவனர்களும் தங்களது செயல்பாடுகள் குறித்து, ‘ஆரம்பகாலக் குழந்தை பருவ மேம்பாட்டு பிரிவு’-க்கு, http://bit.ly/maklumatipakk என்ற இணைப்பின் மூலம் அமைச்சிற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் ஃபாத்திமா சொன்னார்.

  • பெர்னாமா