பிரதமருக்கான இளைஞர் ஆலோசனை வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள்

பிரதமருக்கான இளைஞர் ஆலோசனைக் குழுவில் இணைய, இளைஞர்கள் தேர்வு இறுதி செய்யப்பட்டு வருகிறது என்றும் விரைவில் அது அறிவிக்கப்படும் என்றும் முஹைதீன் யாசின் தெரிவித்தார்.

மலேசிய இளைஞர் பேரவை எனும் முன்முயற்சி, தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் குரல்களையும் ஈடுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஒரு சான்றாகும் என்று பிரதமர் கூறினார்.

“இது ஒரு நல்ல முயற்சி, இதனால் அடிமட்டத்தில் உள்ள இளையத் தலைமுறையினரின் குரலைக் கேட்கவும், அரசாங்கக் கொள்கை திட்டமிடலுக்கும் மேலும் பங்களிக்கவும் முடியும்,” என்று இன்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் (கேபிஎஸ்) முகநூலில், நேரடியாக ஒளிபரப்பப்பட்ட ‘2021 தேசிய இளைஞர் தின விழா’வில் அவர் பேசினார்.

ஒரு விரிவான தேசிய அபிவிருத்தி திட்டத்தை வகுப்பதில், அதிகமான இளைஞர்கள் நேரடியாக ஈடுபட முடியும் என்று நம்புவதாக முஹைதீன் தெரிவித்தார்.

சமூக வலுவூட்டல் நிகழ்ச்சி நிரலை அடைவதற்கு, தன்னார்வத் தொண்டுகள் மூலமும் இளைஞர் வளர்ச்சியில் சமூகப் பொறுப்பின் கூறுகளிலும் கவனம் செலுத்தப்படுவதாக பிரதமர் கூறினார்.

எடுத்துக்காட்டாக, மைவாக் (MyVac) மற்றும் ராக்கான் மூடா விளையாட்டு குமிழியில் (Sukarelawan Rakan Muda Sports Bubble) தொண்டர்களாக இளைஞர்கள் பங்கேற்பது.

தொற்றுநோய் காலகட்டத்தில், முன்னணி தொழிலாளர்களின் சுமையை எளிதாக்குவதற்கும், அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கும் பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கும் கேபிஎஸ் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகத்திற்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சி இதுவாகும்.

மே 3-ஆம் தேதி வரையில், மொத்தம் 10,500 பேர் மைவாக்’கிலும், 5,360 பேர் ராக்கான் மூடா விளையாட்டு குமிழியிலும் தன்னார்வலர்களாகப் பதிவு செய்துள்ளனர்.

அந்த எண்ணிக்கையில், தன்னார்வலர்களில் 80 விழுக்காட்டினர் 15 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.

“கோவிட்-19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் உதவ இளைஞர்களின் பெரும் பங்களிப்புக்கு இது ஒரு சான்றாகும்.

“அந்த வகையில் இளைஞர்களின் பங்களிப்பை அரசாங்கம் பாராட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் மே 15-ம் தேதி, தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது, மேலும் இந்த ஆண்டு கொண்டாட்டம் கடந்த ஆண்டைப் போலவே “இந்தத் தசாப்தம் உங்கள் தசாப்தம்” என்றக் கருப்பொருளைப் பேணுவதன் மூலம் மிதமாக கொண்டாடப்படுகிறது.

  • பெர்னாமா