இந்தியாவில் இருந்து வந்த எழுவருக்குக் கோவிட் -19 – சுகாதார அமைச்சு ஆய்வு செய்கிறது

இந்த வாரத் தொடக்கத்தில், இந்தியாவிலிருந்து மலேசியாவுக்குப் பயணித்த 132 பேரில், எழுவர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; புறப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகள் எதிர்மறையாகவே இருந்துள்ளன.

அவர்கள் அனைவரும் (132) இப்போது கண்காணிப்புக்காக 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்பு கொண்டபோது, ​​நீண்ட காலத் தனிமைபடுத்தும் காலம், அந்த எழுவருக்கும் முந்தையச் சோதனை முடிவுகள் எவ்வாறு எதிர்மறையாகக் கண்டறியப்பட்டது என்பதை ஆய்வு செய்ய அமைச்சுக்கு உதவுமென சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா சொன்னார்.

“இந்தப் புதிய மாறுபாடு (வேரியண்ட்), கிருமியின் தன்மை உண்மையில் எங்களுக்குத் தெரியவில்லை.

“எங்களுக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், இது மிக விரைவாகப் பரவுகிறது, அதிக இறப்புகள் சம்பவிக்கின்றது, மேலும் அது முதலில் கண்டறியப்படாமல் போகலாம். எனவே, எங்களுக்கு நீண்ட தனிமைப்படுத்துதல் நேரம் தேவை,” என்று அவர் கூறினார்.

மே 12 விமானத்தில், கோவிட் -19 எதிர்மறை பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அந்தச் சிறப்புப் பட்டய மலிண்டோ விமானத்தில், 117 மலேசியர்கள், அவர்களுடன் தொடர்புடைய அறுவர், மலேசிய நிரந்தரவாசி ஒருவர் மற்றும் எட்டு புருணை நாட்டுக்காரர்கள் இருந்தனர்.

அந்த ஏழு நேர்மறை வழக்குகளும், மாறுபாடு கிருமியினால் பாதிக்கப்பட்டவர்களா என்பதை அமைச்சால் இன்னும் தீர்மானிக்க முடியவில்லை என்று நூர் ஹிஷாம் கூறினார்.

“முழு மரபணு சோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன, அதற்கு நேரம் எடுக்கும், ஏனென்றால் முழு மரபணு மாறுபாடுகளை துல்லியமாக அடையாளம் காண்பதற்கு முன் கிருமியைப் பண்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கோவிட் -19 தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

மாறுபாடு B.1.617 கிழக்கு ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டது, மேலும் இது தொற்றுநோயாகவும் 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்குக் கடுமையான நோயை ஏற்படுத்தும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மலேசியா இந்திய மாறுபாட்டின் இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது.

கடந்த மாதம் இந்தியாவில் இருந்து வந்த, இந்திய நாட்டவர் ஒருவருக்கு, கோவிட் -19 தொற்று சோதனை இரண்டு முறை எதிர்மறையாக இருந்தது. இருப்பினும், பின்னர் அவர் கடுமையான கோவிட் -19 அறிகுறிகளுடன், ஏப்ரல் 21-ம் தேதி இறந்தார்.

இரண்டாவது வழக்கு, ஏப்ரல் 10-ம் தேதி, மலேசிய வந்து நேர்மறை சோதனை செய்த ஒரு நபர் ஆவார்.

மலேசியர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்கள் ‘மனிதாபிமான மற்றும் பேரழிவு பணி விமான’ங்களில் நாடு திரும்புவதைத் தவிர, இந்தியப் பயணிகள் விமானங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்தியாவில் இருந்து வரும் அனைவருக்கும், 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.