‘தோல்வியுற்ற அரசு’ எதிர்ப்பு : 13 பேர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்

சமூக ஊடகங்களில் பரவிய, ஜொகூர், பத்து பஹாட், பாரிட் ராஜாவில் நடந்த கலவர சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக, சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உதவுவதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 பேர் இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

விசாரணை அதிகாரி விசாரணைகளை முடித்ததை அடுத்து, அவர்கள் அனைவரும் இன்று காலை 11.30 மணியளவில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்த, பத்து பஹாட் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏ.சி.பி. இஸ்மாயில் டோல்லா, மேலும் ஏழு பேர் நாளை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

“இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 144, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 269, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (b) மற்றும் வெடிபொருள் சட்டத்தின் (1957) பிரிவு 8 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல் (உள்ளூர் தொற்றுநோய்களின் நடவடிக்கைகள்) (இயக்கக் கட்டுப்பாடு) (திருத்தம்) விதிமுறைகள் 2021 மற்றும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 48 ஆகியவற்றின் கீழும், அவர்கள் விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார் அவர்.

-பெர்னாமா