விபத்தில் சிக்கிய இரண்டு எல்ஆர்டி இரயில்களும், வாக்குறுதியளிக்கப்பட்ட மூன்று நாட்களுக்கு முன்னதாக, இன்று காலை வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டன என்று போக்குவரத்து அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார்.
தனது முகநூல் பக்கத்தில், மூன்று ஷிப்ட்களில் இடைவிடாது பணிபுரிந்து, அந்த இரண்டு இரயில்களை அகற்றும் பணியை முன்னதாக முடித்ததாக வீ சொன்னார்.
“(இரயில்) திஆர்40 பாதுகாப்பாக சுபாங் கிடங்கை அதிகாலை 3.45 மணிக்கு அடைந்துள்ளது, திஆர்81 அதிகாலை 4.51 மணிக்குக் கோம்பாக் வழித்தடத்திற்கு வந்துள்ளது. இனி, கம்போங் பாரு நிலையம் முதல் கே.எல்.சி.சி. நிலையம் வரை தண்டவாளத்தைப் பழுதுபார்க்கும் பணிகளில் பிரசாராண கவனம் செலுத்தும்.
“… இருப்பினும், மீட்புக் குழு, சம்பந்தப்பட்ட நிலையங்களின் முழு நீட்டிப்புக்கும் ‘மின்சாரத்தை நிறுத்த வேண்டும்’, அதாவது டாங் வாங்கி நிலையம் முதல் டாமாய் நிலையம் வரை, டாமாய், கே.எல்.சி.சி, அம்பாங் பார்க், கம்போங் பாரு மற்றும் டாங் வாங்கி ஆகிய ஐந்து எல்ஆர்டி நிலையங்களும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
பழுதுபார்க்கும் பணிகள் முடிந்ததும், வழிதடங்களின் பயன்பாடு பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (அபாட்) ஓர் ஆய்வை நடத்தும் என்றார் அவர்.
இது தவிர, நேற்று அறிவித்ததுபோல, கிளானா ஜெயா பாதைக்கான 58 எல்ஆர்டி இரயில்களும் குறைப்பு இல்லாமல், முழுமையாக இயக்கப்படும் என்று வீ கூறினார்.
- பெர்னாமா