கோவிட் -19 தொற்றைக் கையாண்டு, “மலேசியாவை முன்னேற்ற ஒரே வழி”, மக்களவையை மீண்டும் கூட்டுவதுதான் என்று அஸலினா ஓத்மான் சைட் பரிந்துரைத்தார்.
தொற்றுநோய் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி 50 விழுக்காட்டை அடையும் வரை, எந்தவிதமான நம்பிக்கையற்றத் தீர்மானத்தையும் மக்களவையில் கொண்டு வரக்கூடாது என்றும் மக்களவை துணை சபாநாயகரான அவர் பரிந்துரைத்தார்.
“… எந்தவொரு பொதுத் தேர்தலும் நடத்தப்படக்கூடாது, அதற்குப் பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்த ஓர் அவசர அமைச்சரவையுடன், ஒரு தற்காலிக அவசரகால அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்தார்.
போதுமான கோரம் இருப்பதை உறுதி செய்வதற்கு, மக்களவையிலும் மேலவையிலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க போதுமான இடவசதிகள் உள்ளது என்றும் பெங்கெராங் எம்.பி. சொன்னார்.
கிடைக்கக்கூடியத் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தி, தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கிட்டத்தட்ட நடத்த முடியும் என்று அஸலினா கூறினார்.
“அதற்கு அதிகச் செலவாகாது, (நாடாளுமன்றத்தில்) வாக்களிக்கும் செயல்முறையை எளிதாக்க மெய்நிகர் பயன்பாடு வழி வாக்களிக்கும் நடைமுறையை ஏற்படுத்தலாம்.
“மேலும், அதிகமாகப் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தடுக்க அவர்களின் ஒலியை முடக்குவதில் நான் மகிழ்ச்சியடைவேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
இது தவிர, அரசியல் சித்தாந்தத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இடைவெளியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் ஒரு “மலேசியக் குழுவாக” ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அஸலினா கூறினார்.
மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கோவிட் -19 குறித்த அறிவு இருக்க வேண்டும் என்றார்.
“மக்களுக்கும் (அரசாங்க) நிர்வாகிகளுக்கும் இடையிலான ‘நம்பிக்கை பற்றாக்குறையை’ நிவர்த்தி செய்ய, எங்களை – அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் – தகவல் மற்றும் பொது சுகாதார முகவர்களாக தகவல்களைப் பரப்புவதற்குப் பயன்படுத்துங்கள்.
“கோவிட் -19 தொற்று சம்பந்தப்பட்ட அனைத்து சுகாதாரத் தகவல்களுடனும் தரவுகளுடனும் எங்களைத் தயார்படுத்துங்கள்,” என்று அவர் கூறினார்.