மைசெஜாத்தெரா மூலம் தடுப்பூசியைத் தேர்வு செய்யலாம் – கைரி

விரைவில் மக்கள் தாங்கள் விரும்பும் தடுப்பூசி வகையைத் தேர்வு செய்ய முடியும்.

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின், மைசெஜாத்தெரா விண்ணப்பத்தின் மூலம் பொதுமக்களுக்கு அந்தத் தேர்வை வழங்க அவரது தரப்பு ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

“மை.எஸ்.ஜே. அமைப்பு மூலம், பொதுமக்கள் அவர்கள் பெற விரும்பும் தடுப்பூசியைத் தேர்வு செய்யக்கூடிய வசதியை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், இது விரைவில் மேம்படுத்தப்படும்,” என்று அவர் இன்று பிற்பகல் ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்) சமீபத்திய முன்னேற்றங்களைத் தெரிவிக்க அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

கடந்த பிப்ரவரியில் ‘பிக்’ தொடங்கியதிலிருந்து, பெறுநர்களுக்கு அவர்கள் பெறும் தடுப்பூசி வகையைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம் வழங்கப்படவில்லை.

பிற நாடுகளில், பெறுநர்களிடையே இரத்த உறைவு வழக்குகள் குறித்து சில தரப்பினரின் கவலைகள் காரணமாக ‘பிக்’ பட்டியலிலிருந்து அரசாங்கம் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை முன்பு அகற்றியது.

பதிவைப் பொறுத்தவரை, இதுவரை மூன்று உற்பத்தியாளர்களிடமிருந்து, ஃபைசர், சினோவாக் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் மட்டுமே மலேசியச் சுகாதார அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கோவிட் -19 நோய்த்தடுப்பு சிறப்புப் படைக் குழு (சிஐடிஎஃப்) இன்னும் பயன்படுத்த வேண்டிய முறைகள் பற்றி ஆராய்ந்து வருவதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதன் முன்னேற்றங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கைரி செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆய்வு செய்யப்படுபவைகளில், சந்திப்புக்கான தேதி மற்றும் தடுப்பூசி பெறும் இடத்தைத் தேர்வு செய்வதற்கான விருப்பத்தை மைசெஜாத்தெரா பயனர்களுக்கு வழங்குதல் ஆகியவை அடங்கும்.

“செயல்முறைகள் முடிந்தவரை எளிதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

அஸ்ட்ராஸெனெகா பதிவுக்காக, நேற்று செய்ததைப் போல வலைத்தளத்தின் மூலம் இனி ஆன்லைன் முன்பதிவுகள் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார், இதனை அவர்கள் குறைபாடுகளிலிருந்து கற்றுக்கொண்டதாகக் கூறினார்.

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பதிவு செயல்முறைக்கு பயன்படுத்தப்படும் அமைப்பில் ஏற்பட்ட பல தொழில்நுட்பச் சிக்கல்களினால், கைரியும் ​​சிஐடிஎஃப்-உம் நேற்று முதல் பல விமர்சனங்களுக்கு ஆளாகினர்.