கிளந்தானில், 5,921 கோவிட் -19 நோயாளிகளில், 1,078 அல்லது 18 விழுக்காட்டினர் 12 வயது அல்லது அதற்கும் கீழ்ப்பட்ட குழந்தைகள் என்று உள்ளூராட்சி, வீட்டுவசதி மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் டாக்டர் இசானி ஹுசின் தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையைப் பதிவிட்ட மாவட்டங்களில், கோத்தா பாரு (517), பாசீர் மாஸ் (132) மற்றும் தும்பாட் (120) ஆகியவை உள்ளன, இந்த எண்ணிக்கை மிகவும் கவலையளிக்கிறது என்றார் அவர்.
“மக்கள் எஸ்ஓபி-க்களைக் கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், குழந்தைகளைப் பொது இடங்களுக்கு அழைத்து வரக்கூடாது.
“வெளியில் சென்று வீடு திரும்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தொடுவதற்கு அல்லது தொடர்புகொள்வதற்கு முன் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்று நேற்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
கடந்த செவ்வாயன்று, வயதானவர்களை அடுத்து கோவிட் -19 தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்களும் குழந்தைகளும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
இதற்கிடையில், டாக்டர் இஸானி தனது முகநூல் இடுகையின் மூலம், கிளந்தான் இன்று 754 புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளது, இது மாநிலத்தில் கோவிட் -19 நேர்மறை வழக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை நான்கு புதியத் திரளைகளுடன் 24,723-ஆக கொண்டு வந்துள்ளது எனத் தெரிவித்தார்.
- பெர்னாமா