அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (ஜி.எல்.சி.) நிர்வாகமற்ற பதவிகளுக்கு, அரசாங்கம் அரசியல்வாதிகளை நியமிக்காவிட்டால் நாடு பெரும் சேமிப்பைச் செய்ய முடியும்.
சம்பந்தப்பட்ட ஜி.எல்.சி.க்கள், அரசியல் தலையீடு தேவையில்லாமல் திறமையான ஊழியர்களுடன் தொழில் ரீதியாக செயல்பட முடியும் என்று பாசீர் கூடாங் எம்.பி. ஹசான் அப்துல் கரீம் கூறினார்.
அதே நேரத்தில், அந்நிறுவனங்கள் அமைச்சர் மற்றும் அமைச்சரவையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன என்றார் அவர்.
இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “தற்போதைய நடைமுறை அரசியல் ஊழலின் ஒரு வடிவம்” என்ற அவர், பிரசாரானா மலேசியா பெர்ஹாட்டைச் சேர்ந்த அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுட்டின் அப்துல் இரஹ்மானின் சேவைகள் நிறுத்தப்படுவது குறித்து கருத்துத் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் ஏற்பட்ட எல்ஆர்டி விபத்து தொடர்பாக, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய ஒரு நாள் கழித்து – பரவலான விமர்சனங்களைப் பெற்ற – தாஜுட்டினின் சேவை நிறுத்தப்பட்டதாக அவருக்கு அறிவிக்கும் கடிதத்தை நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் நேற்று வெளியிட்டார்.
கடந்த ஆண்டு மே மாதம், தாஜுட்டின் பிரசாரானாவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அமைச்சரவையில் உறுப்பினர்களாக இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் முழுநேர சட்டமியற்றுபவர்களாக இருப்பதுதான் என்று ஹசான் கூறினார்.
“எல்.ஆர்.டி.யை நிர்வகிப்பது அல்ல, அவர்களின் உண்மையான வேலை இங்குதான்,” என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு ஜி.எல்.சி.-யிலும், நிறுவனத்தின் செயல்பாடுகளை நடத்துவதற்கு ஏற்கனவே அதிக ஊதியம் பெறும் நிர்வாக அதிகாரிகள் உள்ளனர் என்றும், அரசியல்வாதிகளை நியமிப்பதன் மூலம் அந்த நிறுவனத்தின் நிதிச் சுமையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் ஹசான் கூறினார்.
“இது ஒழிக்கப்பட்டால், ஒவ்வொரு ஆண்டும் எத்தனை நூறு மில்லியன் – ஒருவேளை பில்லியன் ரிங்கிட்கூட – சேமிக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்?
“பிரசாரானா தலைவர் பதவியை மட்டுமல்லாமல், பிற ஜி.எல்.சி. நிறுவனங்களான தெனகா நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி.), ஃபெல்க்ரா, ஃபெல்டா, ரிஸ்டா, லெம்பாகா தபூங் ஹாஜி, சாரிகட் பெருமஹான் நெகாரா, பெர்மோடாலான் நேஷனல் பெர்காட் (பி.என்.பி), மஜ்லிஸ் அமானா ரக்யாட் (மாரா), பெர்படானான் தபூங் பெண்டிடிகன் திங்கி நேஷனல் (பி.டி.பி.டி.என்) மற்றும் இன்னும் பலவற்றிலும் அரசியல்வாதிகளின் தலைமை பொறுப்பை அகற்ற வேண்டும்.
“தகுதிவாய்ந்த, சிறப்பான வல்லுநர்கள் ஜி.எல்.சி நடவடிக்கைகளை இயக்கட்டும்,” என்று அவர் கூறினார்.