நேற்று, பாசீர் சாலாக் எம்.பி. தாஜுட்டின் அப்துல் இரஹ்மானைக் கைது செய்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), வாய்வழி ஜாமீனில் அவரை விடுவித்ததாக ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தாஜுட்டின் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு எம்.ஏ.சி.சி. எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இன்று அம்னோ தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்த தாஜுட்டின் ஊடகங்களுடன் பேச மறுத்துவிட்டார்.
தி வைப்ஸ் மற்றும் உத்துசான் ஆன்லைன் ஆகியவற்றின் அறிக்கையின்படி, புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட தாஜுட்டின் கைது செய்யப்பட்டார்.
மே 26 முதல், பிரசாரனாவின் நிர்வாகமற்றத் தலைவர் பதவியிலிருந்து நிதியமைச்சு தாஜுடினை நீக்கியது, அது உடனடியாக நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மே 24-ம் தேதி, கிளானா ஜெயா எல்ஆர்டி விபத்து குறித்த தாஜுடினின் சர்ச்சைக்குரிய செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர் இது.
நாட்டில் நடந்த எல்ஆர்டி வரலாற்றிலேயே மிக மோசமான விபத்து அது, 213 பயணிகள் காயமடைந்தனர். சிலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது, மேலும் 3 பேர் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த இடத்தை உடனடியாக பார்வையிடாததால் தாஜுடின் விமர்சிக்கப்பட்டார்.
தனது பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தாஜுடின் இரண்டு இரயில்கள் “ஒன்றோடொன்று முத்தமிட்டுக்கொண்டன” என்று வர்ணித்து, அந்த விபத்தின் தீவிரத்தை அவர் குறைத்து மதிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரசாரனா பெர்ஹாட்டில் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை முடித்துவிட்டதாக எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் அஸாம் பாக்கி, தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்படக்கூடியத் தரப்பினர் இருக்கிறார்களா இல்லையா என்பது உட்பட சட்டத்துறைத் தலைவரின் அறிவுறுத்தல்களுக்காக எம்.ஏ.சி.சி. இன்னும் காத்திருக்கிறது என்று மே 4-ம் தேதி ஆஸ்ட்ரோ அவானி செய்தி வெளியிட்டதை அவர் மேற்கோளிட்டுள்ளார்.
சந்தேக நபருக்கோ, அவரது உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ, கையூட்டிற்காக தனது பதவியைப் பயன்படுத்திய குற்றத்தின் அடிப்படையில் எம்.ஏ.சி.சி. சட்டம் 2009-இன், பிரிவு 23 (1)-இன் படி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் விளக்கினார்.
அந்த விசாரணையுடன், தாஜுடின் தனது குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன், ஒரு மேம்பாட்டுத் திட்டத்தில் ‘தலையிட்டார்’ என்றக் குற்றச்சாட்டுகளும் வெளிவந்தன.
கடந்த ஜனவரியில், தாஜுட்டின் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, எம்.ஏ.சி.சி. அமலாக்க அதிகாரிகள் பிராசராணா பெர்ஹாட்டின் அலுவலகத்திற்குச் சென்றனர்.
இதற்கிடையில், கோலாலம்பூரின் டாங் வாங்கியில் உள்ள லெத்திதியுட் 8 திட்டம், 2012-ஆம் ஆண்டில், இந்தான் செகித்தார் சென். பெர்.-க்குத் (Intan Sekitar Sdn Bhd) திறந்த தெண்டர் மூலம், அவர் பிராசராணாவின் தலைவராவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே வழங்கப்பட்டது என்று கூறினார்.
இந்தான் செகித்தார் சென். பெர்ஹாட்டின் 51 விழுக்காடு உரிமை, பரிவர்த்தனை பட்டியலில் உள்ள க்ரெஸ்ட் பில்டர் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (Crest Builder Holdings Berhad) நிறுவனத்திற்குச் சொந்தமானது, 49 விழுக்காட்டு உரிமையை டெதிக் உதோ சென். பெர். (Detik Utuh Sdn Bhd.) கொண்டுள்ளது.
தாஜுட்டின் குடும்பம், திண்டாக்கான் ஜுவாரா சென். பெர். (Tindakan Juara Sdn Bhd) மூலம் டெதிக் உதோ சென். பெர்ஹாட்டில், 40 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கிறது, இது அவர்களுக்கு அத்திட்டத்தில் 19.6 விழுக்காடு பங்குகளை வழங்குகிறது.
இந்தான் செகித்தாருக்கு, RM80 மில்லியனைச் செலுத்துவதன் மூலம், இந்தத் திட்டத்தை நிறுத்த பிரசாரனா வாரியம் பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து அந்நிறுவனம் கவனத்திற்கு வந்தது.