மலேசியத் தடுப்புக்காவல் மரணங்களின் பட்டியலில், ஆக அண்மையப் புள்ளிவிவரமாக 21 வயதான சுரேந்திரன் ஷங்கர் இணைந்தார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த இளைஞன், சிம்பாங் ரெங்கம் சிறைக்கு மாற்றப்பட்ட ஒரு மாதத்திற்குள், நேற்று முந்தினம் (26 மே) காலை, குளுவாங் மருத்துவமனையில் இறந்து போனார்.
சுரேந்திரன் ஷங்கரின் மரணம், ஏப்ரல் 18-ம் தேதி ஏ கணபதி மற்றும் மே 20-ம் தேதி எஸ் சிவபாலன் ஆகியோர் மரணமடைந்த ஒரு மாதத்திற்குள் நிகழ்ந்துள்ளது. அவர்கள் இருவரும் கோம்பாக் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இறந்தனர்.
நேற்று சிறை அதிகாரி ஒருவர் தாக்கல் செய்த போலிஸ் அறிக்கையில், குளுவாங் மருத்துவமனையின் மருத்துவரை மேற்கோள் காட்டி, சுரேந்திரன் “பல உறுப்புகள் செயலிழப்புடன் அழுகிய நிலையால்” இறந்துவிட்டதாகக் கூறியதாக எஃப்.எம்.டி. செய்திகள் கூறிகின்றன.
கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், அவர் சிம்பாங் ரெங்கம் சிறையில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
“அவர் போய்விட்டார் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் இங்கே அநீதி நடந்திருப்பதாக நான் உணர்கிறேன்,” என்று சுரேந்திரனின் தாய் குமாதாமேரி ஆசிர்வதம் கூறினார்.
“சுரேந்திரனுக்கு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லாததால், இங்கு ஏதோ ஒரு நாடகம் நடப்பதாக நாங்கள் உணர்கிறோம். அவருக்கு 21 வயதுதான் ஆகிறது.”
கடந்த ஜூன் மாதம், சுரேந்திரன் பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டார், மேலும் குற்றத் தடுப்புச் சட்டத்தின் (போகா) கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கு முன்பு, நான்கு நாட்கள் அவர் தடுத்து வைக்கப்பட்டார்.
சுரேந்திரன் ஷங்கரின் தாய் குமாதாமேரி ஆசிர்வதமும் அவரின் உறவினர் சுரேந்தர் ரிச்சர்ட்டும்
கடந்த ஆகஸ்ட் மாதம், அவர் மூவார் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டார், அதுதான் அவரது குடும்பத்தினர் அவரைக் கடைசியாகப் பார்த்தது. ஜனவரி மாதம் 21 வயதான சுரேந்திரன், ஏப்ரல் 25-ஆம் தேதி சிம்பாங் ரெங்கம் சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிம்பாங் ரெங்கம் சிறை அதிகாரியிடமிருந்து, தனக்கு ஓர் அழைப்பு வந்ததாக குமாதாமேரி கூறினார், சுரேந்திரனுக்கு “வயிற்றில் கடுமையான வலி” இருப்பதாகவும், செவ்வாயன்று குளுவாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மருத்துவமனைக்கு அழைத்தபோது, சுரேந்திரன் “ஆபத்தான நிலையில்” இருப்பதாகக் கூறினர், இரவில் மீண்டும் அழைத்து, மேலும் விவரங்களை வழங்கக்கூடிய மருத்துவரிடம் பேசும்படி அவரிடம் கூறப்பட்டதாக குமாதாமேரி சொன்னார்.
சுரேந்திரனின் உறவினர், சுரேந்தர் ரிச்சர்ட், இரவு 8 மணியளவில் குளுவாங் மருத்துவமனைக்கு அழைத்தபோது, சுரேந்திரனின் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாகக் கூறப்பட்டது.
நேற்று அதிகாலை 1.15 மணியளவில் அவர் திரும்ப அழைத்தபோது, ஒரு போலீஸ் அதிகாரி சுரேந்திரன் அதிகாலை 12.30 மணியளவில் இறந்துவிட்டதாகத் தகவல் கொடுத்துள்ளார்.
கணபதியின் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் கே கணேஷ், சுரேந்திரன் சார்பாகச் செயல்பட ஒப்புக் கொண்டார்.
பக்காத்தான் ஹராப்பான் பிரதிநிதிகள் குழு ஒன்று, கணபதி மற்றும் சிவபாலனின் மரணங்கள் குறித்து விசாரிக்க ஒரு சுயாதீன பணிக்குழுவைக் கோரும் ஒரு மனுவை, புத்ராஜெயாவில் உள்ள உள்துறை அமைச்சின் தலைமையகத்தில் ஒப்படைக்க விரும்பினர், அவர்களுடன் கணேசும் இருந்தார்.
ஆனால், அக்குழுவினர் அமைச்சின் வாயில்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அரசாங்கம் ஆற அமர நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, இதுபோன்ற இன்னும் எத்தனை மரணங்கள் நடக்க வேண்டும்?” என்று அவர் கேட்டார்.
“நம்மில் யாருக்கும் இதுபோல் நடக்கக்கூடாது என்பதை உணர்ந்து, மக்கள் குரல் எழுப்ப வேண்டும்.”
- ஃப்ரி மலேசியா டூடே