ஜூன் 1 தொடக்கம், 14 நாட்களுக்கு நாட்டில் ‘முழு கதவடைப்பு’

ஜூன் 1 முதல் இரண்டு வாரங்களுக்கு, சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளின் முழு கதவடைப்பு நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.

இத்தகவலை, பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தது.

“இன்று பிற்பகல், பிரதமரின் தலைமையில் கோவிட் -19 மேலாண்மை குறித்த தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்) சிறப்பு அமர்வு, சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளை முழுமையாக மூடுவதையோ அல்லது முதல் கட்ட ‘முழு கதவடைப்பு’ ஒன்றையோ நாடு முழுவதும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. ஜூன் 1, 2021 முதல் ஜூன் 14, 2021 வரை 14 நாட்களுக்கு இது அமலில் இருக்கும்.

“இந்தக் காலகட்டத்தில், தேசியப் பாதுகாப்பு மன்றத்தால் பட்டியலிடப்படும் அத்தியாவசியப் பொருளாதார மற்றும் சேவைத் துறைகளைத் தவிர அனைத்து துறைகளும் செயல்பட அனுமதிக்கப்படாது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மலேசியாவில், கோவிட் -19 தொற்றின் தற்போதைய நிலைமையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுவரை, அத்தொற்றின்  விளைவாக 2,552 பேர் இறந்துள்ளனர், அதுமட்டுமின்றி இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

“மிகக் கொடிய மற்றும் விரைவாகப் பரவக்கூடிய புதிய வகை மாறுபாடுகளின் (வேரியண்ட்) இருப்பும் இன்றைய முடிவுகளுக்குக் காரணமாகும்.

“அண்மையில், தினசரி நேர்வுகளின் அதிகரிப்பு மிகவும் வியத்தகு வகையில் மேல்நோக்கியப் போக்கைக் காட்டுவதால், கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கான மருத்துவமனைகளின் திறனும் அதிகரித்து வருகிறது, ஆனால் நம்முடைய மருத்துவமனைகளின் திறன் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது,” என்று அது கூறியுள்ளது.

ஜூன் 1-ல் தொடங்கவுள்ள முதல் கட்ட ‘முழு கதவடைப்பு’, மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட முழு கதவடைப்பில், தினசரி கோவிட் -19 தொற்று எண்ணிக்கையைக் குறைப்பதில் வெற்றி பெற்றால், அரசாங்கம் இரண்டாம் கட்ட கதவடைப்பைச் செயல்படுத்தும், இதில் பெரிய கூட்டங்கள் இல்லாத மற்றும் சமூக இடைவெளிகளுக்கு இணங்கக்கூடிய சில பொருளாதாரத் துறைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கிறது.

இரண்டாம் கட்டக் கதவடைப்பு, முதல் கட்டம் முடிந்து, நான்கு வாரக் காலத்திற்குச் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு வார இரண்டாம் கட்டம் முடிவடைந்த பின்னரே, தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளபடி, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி) அரசாங்கம் மீண்டும் செயல்படுத்தும், அப்போது அனைத்து பொருளாதாரத் துறைகளும் எஸ்ஓபி-களின்படி செயல்பட அனுமதிக்கப்பட்டாலும், சமூக நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது.

இருப்பினும், ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான முடிவு மலேசியச் சுகாதார அமைச்சின் ஆபத்து மதிப்பீட்டிற்கு உட்பட்டதாக இருக்கும்.

நாட்டில் பொது சுகாதார அமைப்பு வீழ்ச்சியடையாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் திறனை அதிகரிக்க சுகாதார அமைச்சுக்குப் பல்வேறு ஆதரவுகளும் உதவிகளும் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கை உறுதியளித்துள்ளது.

நாட்டில், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் முயற்சியில் அடுத்த சில வாரங்களில் தடுப்பூசிகள் அதிகரிக்கப்படும்.

இது தவிர, மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பொருளாதாரத் துறைகளுக்கு உதவி தொகுப்புகளை நிதி அமைச்சு விவரிக்கும் என்றும் அது கூறியுள்ளது.

“இந்த உதவித் தொகுப்புகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

“அனைத்து மலேசியர்களும் ஒழுங்கை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் கோவிட் -19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க அமைக்கப்பட்ட எஸ்.ஓ.பி.க்களை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.

“கோவிட் -19 நோய்த்தொற்றின் வளைவைக் கூட்டாகத் தாக்க, `வீட்டில் இருப்பதே சிறந்தது’,” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.