தடுப்புக் காவலில் மரணமடைந்த இளைஞர் குறித்து விசாரிக்கவும் – என்.ஜி.ஓ.க்கள் கோரிக்கை

நேற்று, தடுப்புக் காவலில் இறந்ததாகக் கூறப்படும் சுரேந்திரன் ஷங்கரின் மரணம் குறித்து, கொரோனர் நீதிமன்றத்தால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தடுப்புக் காவல் மரணம் மற்றும் சித்திரவதையை ஒழியுங்கள் (எடிக்ட்) தன்னார்வத் தொண்டு நிறுவனம் அழைப்பு விடுத்தது.

“தடுப்புக் காவல் மரணங்கள் அடிக்கடி நிகழ்வது குறித்து அரசாங்கம் கண்டுக்கொள்ளாமல், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாக எடிக்ட் தெரிவித்தது.

“இந்த இளைஞரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய, கொரோனர் நீதிமன்றம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று எடிக்ட் வலியுறுத்துகிறது.

“குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 334 மற்றும் 2019-ஆம் ஆண்டின் நடைமுறை 2-ஆம் இலக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, காவலின் போது ஏற்படும் மரண வழக்குகளை விசாரிக்க, சட்டத்தால் கட்டளையிடப்பட்ட ஒரே அமைப்பு கொரோனர் நீதிமன்றம்தான்,” என்று அந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இறந்தவரின் மரணத்திற்கு நீதி கோருவதற்குச் சுரேந்திரனின் குடும்ப உறுப்பினர்கள் முன்வருவார்கள் என்று எடிக்ட் நம்புகிறது, மேலும் தேவைப்பட்டால் அக்குடும்பத்திற்குச் சட்ட அம்சங்களில் உதவவும் அது தயாராக இருக்கிறது.

இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை – குறிப்பாக உள்துறை அமைச்சரை – எடிக்ட் வலியுறுத்தியது.

“சிறைச்சாலைகள், குடிநுழைவுத் துறை தடுப்பு மையங்கள் மற்றும் காவல்துறை தடுப்பறைகளில் இருக்கும் கைதிகளின் நலன் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.

“எனவே, சிறைச்சாலைகள், குடிநுழைவுத் துறை தடுப்பு மையங்கள் மற்றும் காவல்துறை தடுப்பறைகளின் வசதிகளும் சூழல்களும் தடுத்து வைக்கப்படும் கைதிகளுக்கு ஏற்றவாறு இருக்க அரசாங்கம் ஆவனச் செய்ய வேண்டும்,” என்று எடிக்ட் தெரிவித்துள்ளது.

கைதிகளைச் சிறப்பாகக் கையாளக்கூடிய வகையில், அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அத்தன்னார்வத் தொண்டு நிறுவனம் அழைப்பு விடுத்தது.

முன்னதாக, “வயிற்றில் கடுமையான வலி” இருப்பதாகப் புகார் அளித்ததால், செவ்வாய்க்கிழமை (மே 25) குளுவாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேந்திரன், மே 27 அதிகாலை இறந்துவிட்டார் என்று ஃப்ரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டது.

21 வயதான அந்த இளைஞர், போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.