நேற்று இரவு, ‘முழு கதவடைப்பு’ அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கு வங்கி கடன்களை ஒத்தி வைத்தல் (மொரதோரியம்) உட்பட சிறப்பு உதவித் தொகுதிகளை விரைவில் அறிவிக்குமாறு அம்னோ, அமானா மற்றும் பி.கே.ஆர். கட்சிகளின் இளைஞர் பிரிவுத் தலைவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர்
அந்த அழைப்பை மீண்டும் வலியுறுத்திய அம்னோ இளைஞர் தலைவர், அசிராஃப் வாஜ்டி டுசுக்கி, இரண்டு வார முழு அடைப்பின் போது பல பொருளாதாரத் துறைகள் பாதிக்கப்படும் என்றார்.
“ஐ-சினார் 2.0, ஐ-லெஸ்தாரி 2.0 செயல்படுத்துவதோடு, அவசரக்காலச் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, கடன் ஒத்திவைப்பு 2.0-ஐ, 3-லிருந்து 6 மாதங்களுக்குக் கூடுதல் கட்டணங்கள் இன்றி வழங்குமாறு வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் சிறப்பு உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐ-சினார் மற்றும் ஐ-லெஸ்தாரி ஆகியவைப் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) பங்களிப்பாளர்கள், அவர்களின் பங்களிப்புகளைத் திரும்பப் பெற அனுமதிக்கும் திட்டங்களாகும்.
நேற்றிரவு, பிரதமர் முஹைதீன் யாசின், ஜூன் 1 முதல், 14 நாட்களுக்குச் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளை முழுமையாக மூடுவதாக அல்லது நாடு முழுவதும் கதவடைப்பை அமல்படுத்த உள்ளதாக அறிவித்தார்.
இதற்கிடையில், அமானா இளைஞர் தலைவர் ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின், தடைக்காலத்தை அமல்படுத்துவது, சம்பந்தப்பட்ட வங்கிகளைப் பாதிக்கும் என்று சாக்கு போக்கு சொல்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றார்.
வங்கிகளின் நலன்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல், கார், வீடு மற்றும் பிறக் கடன்களுக்குப் பணம் செலுத்த ஒவ்வொரு மாதமும் போராடும் மக்கள் மீதும் கவனம் செலுத்துமாறு நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸை அவர் கேட்டுக்கொண்டார்.
“அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றக் காரணத்தைச் சொல்ல வேண்டாம், மக்கள் நம்ப மாட்டார்கள். தேவையற்ற மற்றும் வீணானத் திட்டங்களையும் கொள்முதல்களையும் உடனடியாக நிறுத்துங்கள்,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
ஷஸ்னியுடன் உடன்பட்ட பி.கே.ஆர். இளைஞர் தலைவர், அக்மால் நசீர், அரசாங்கம் உடனடியாக ஒரு தானியங்கி கடன் ஒத்திவைப்பை அறிவிப்பதன் மூலம் மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்றார்.
“மேலும், கல்விக் கடன்கள், ‘முதல் வீடு’ கடன்கள் (குறிப்பாக இன்னும் கட்டுமானத்தில் உள்ளவை) போன்ற நிதிக் கடன்களுடன் பிணைக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்குச் சிறப்பு உதவியாக, கடன் ஒத்திவைப்பு காலகட்டத்தில் வட்டி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
இது தவிர, ஊதிய மானியத் திட்டத்தையும் சிறு வணிகர்களுக்கான உதவிகளையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றார்.
மே 11-ம் தேதியன்று, தேசிய வங்கி ஒரு விரிவான கடன் ஒத்திவைப்பு என்பது, கடன் வாங்குபவர்களுக்குச் சிறந்தத் தீர்வாக இருக்காது, அதற்குப் பதிலாக அவர்கள் வங்கிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றது.
தேசிய வங்கியின் ஆளுநர், நோர் ஷம்சியா மொஹமட் யூனுஸ், அனைத்து வங்கிகளிலும் இலக்கு வைக்கப்பட்ட கடன் ஒத்துவைப்பு உட்பட, பணம் செலுத்தும் உதவித் திட்டங்கள் இருப்பதாகவும், வேலை இழந்த அல்லது வருமானம் குறைந்துவிட்ட கடன் வாங்குபவர்களுக்கு இது வழங்கப்படலாம் என்றும் கூறினார்.
கடன் வாங்கியவர்கள், கடன் ஆலோசனை மற்றும் மேலாண்மை நிறுவனம் (ஏ.கே.பி.கே) உள்ளிட்ட பல்வேறு சேனல்களைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.
2021 வரவுசெலவுத் திட்டத்தில், 600 பில்லியன் ரிங்கிட் மற்றும் பல தூண்டுதல் தொகுப்புகளில் அரசாங்கம் நிறையப் பணத்தைச் செலவழித்ததாகப் பிரதமர் முஹைதீன் யாசின் கடந்த மாதம் தெரிவித்தார்.
முன்னதாக, RM20 பில்லியன் மதிப்புள்ள மக்களையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் திட்டம் (பெமர்காசா), RM250 பில்லியன் மதிப்புள்ள ப்ரிஹாதின் ரக்யாட் பொருளாதாரத் தூண்டுதல் தொகுப்பு (ப்ரிஹாதின்), RM10 பில்லியன் மதிப்புள்ள சிறு, நடுத்தர வணிகர்களுக்கு கூடுதல் கவனிப்பு தொகை, RM35 பில்லியன் மதிப்புள்ள தேசியப் பொருளாதார மீளுருவாக்கம் திட்டம் (பெஞ்ஜானா), RM10 பில்லியன் மதிப்பு கொண்ட கூடுதல் சிறப்பு முன்முயற்சி கட்டமைப்பு தொகுப்பு : நாம் அக்கறை கொள்கிறோம், மற்றும் RM15 பில்லியன் மதிப்புள்ள மலேசியப் பொருளாதார மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு உதவி தொகுப்பு (பெர்மாய்) ஆகியவற்றை முஹிட்டின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.