கோலாலம்பூர், செலாயாங் தினசரி சந்தையில் உள்ள வர்த்தகர்களின் சுமையை குறைக்க, இந்த ஆண்டு இறுதி வரை இலவச வாடகை வசதிகள் வழங்கப்படும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை முதல், சந்தையின் புதியக் கட்டிடத்தில் செயல்படத் தொடங்கும் வர்த்தகர்களுக்கும் இந்தத் தளர்வு வழங்கப்படும்.
“வாடகை வீதத்தைக் கொஞ்சம் குறைக்க வேண்டுமென எனக்கு ஒரு விண்ணப்பம் வந்துள்ளது. நாங்கள் அதை இலவசமாகவே வழங்க முடிவு செய்தோம், ஆண்டு இறுதி வரை வாடகை செலுத்த வேண்டிய அவசியமில்லை. இது வர்த்தகர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்… ,” என்று அவர் இன்று கீச்சகத்தின் வழியாகத் தெரிவித்தார்.
எதிர்வரும் செவ்வாயன்று, புதியக் கட்டிடத்தில் செலாயாங் தினசரி சந்தை முழுமையாகச் செயல்படும், அதே நேரத்தில் இப்பகுதியில் இயங்கும் தற்காலிகச் சந்தை நடவடிக்கைகள் திங்கள்கிழமை நிறுத்தப்படும்.
இதற்கிடையில், தற்போதுள்ள தடுப்பூசி விநியோக மையத்திற்கு (பிபிவி) மாற்றாக அறிவிக்கப்பட்ட, மைமெடிக்@விலாயா மொபைல் தடுப்பூசி டிரக் செவ்வாய்க்கிழமை தொடங்கும் முழு கதவடைப்பு காலத்திலும் தொடரும் என்று அன்வார் கூறினார்.
- பெர்னாமா