ஜூன் 1 முதல், நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சாலைத் தடைகள்

ஜூன் 1 முதல், முழு கதவடைப்பு அமலாக்கத்தில் இருக்கும் போது, நாடு முழுவதும் சாலைத் தடைகளின் எண்ணிக்கை (எஸ்.ஜே.ஆர்.) 800-க்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார், தற்போது கிட்டத்தட்ட 600 சாலைத் தடைகள் நாட்டில் போடப்பட்டுள்ளன.

குடிநுழைவுத் துறை, மலேசியக் கடல்சார் அமலாக்க நிறுவனம் (மரித்திம் மலேசியா) மற்றும் மலேசியத் தன்னார்வத் துறை (ரேலா) உள்ளிட்ட 15,000 உறுப்பினர்கள் உள்பட, உள்துறை அமைச்சின் கீழ் மொத்தம் 70,000 போலிசார் மற்றும் முகவர்கள் நாடு முழுவதும் நிறுத்தப்படுவார்கள் என்றார்.

எஸ்ஓபி அமலாக்கம் திறம்படச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, தற்போது 37,000 உறுப்பினர்களுடன் இயங்கும் போலிஸ் படை 55,000 உறுப்பினர்களாக உயர்த்தப்படும் என்றார் அவர்.

“இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லாவிட்டால், உள்துறை அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் இருந்து அதிகமான உறுப்பினர்களை நாங்கள் சேர்ப்போம்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

போலிஸ் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி, குடிநுழைவுத் துறை இயக்குநர் கைருல் டிசைமி டாவுட் மற்றும் மலேசியக் கடல்சார் தலைமை இயக்குநர் மொஹமட் ஸூபில் மாட் சோம் ஆகியோரும் உடன் கலந்து கொண்டனர்.

  • பெர்னாமா